பக்கம்:இலக்கண வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

ஒத்ததெனப் பொதுவில் தோன்றும் இரண்டன் நுண்ணிய வேறுபாட்டையும் அரிதாக விளக்கிச் செல்கிறார்.

“மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னை எனின் மடம் என்பது பொருண்மை அறியாது திரியக்கோடல்; பேதைமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல்” (பொ. 248)

‘ஐவகை யடியும்’ (செய். 48) என்பது ஆசிரியப்பாவிற் குரிய இலக்கணமுடைத்தாயிலும் ஓசையின்மையான் ஆசிரியம் எனப்படாது நூலெனப்படும் என்று கொள்க (பொ. 391).

"கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல், மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றாதல் போறல்" என்பவற்றைக் காண்க.

எடுத்துக் கொண்ட ஒன்றை உவமையால் விளக்கும் நயத்தையும் அரிதாக மேற்கொள்கிறார் இளம்பூரணர்:

சிறப்புப் பாயிரத்தில் “பாயிரமென்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அது கேட்டு என்னை பயனெனின் கற்று வல்ல கணவற்குக் கற்புடையாள் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும் திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலானும் பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும் பாயிரம் கேட்டல் பயனுடைத்தாயிற்று” என ஓரிடத்தே மூன்றுவமைகள் வைத்து விளக்குகிறார்.

இகர உகரங்களுக்கும் குற்றியலிகர குற்றியலுகரங்களுக்கும் ஒலியளவையால் வேறுபாடு உண்டாயினும்இ. வ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/126&oldid=1471460" இலிருந்து மீள்விக்கப்பட்டது