பக்கம்:இலக்கண வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

ஆங்குண்டு. அப்பெயர் நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் பெயர்களை நினைவூட்டுகின்றது. கொற்கை சூழ்ந்த பகுதியில் படைகள் தங்கியிருந்த சான்று காட்டும் ஊர்ப்பெயர்கள் உள்ளன. ஆதலால் அப்படைத் தலைவர் ஒருவர் குடிவழிப் பெயரே சேனாவரையர் என்பதற்குக் கிட்டும் சான்றுகள் இவை எனக் கொள்ளலாம்.

ஆற்றூர்க் கல்வெட்டு மற்றொன்றில் சேனாவரையர்க்கு ‘அழகப்பிரான் இடைக்கரையாழ்வான்’ என்றொரு பெயருண்மை கொண்டு அப்பெயரே சேனாவரையரின் இயற்பெயராக இருக்கக் கூடும் என்பர்.

சேனாவரையர் உரையாசிரியர் இளம்பூரணர் உரையைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் ஆகியோர் கொள்கைகளை மறுத்துரைக்கும் இடங்களும் இவர் நூலில் உள. ஆதலால், அவர்களுக்குக் காலத்தால் பிற்பட்டவர் இவர் என்பது உறுதியாகும்.

‘மாறோகம்’ என்பது பழமையானதோர் ஊர். அவ்வூர்ப் புலவர் ‘மாறோகத்து நப்பசலையார்’ என்பார் சங்கச் சான்றோர் வரிசையைச் சார்ந்தவர். அம் மாறோகம் கொற்கை சூழ்ந்த பகுதியாகும். அதன் வழக்கம் ஒன்றைச் சேனாவரையர் தம் உரையுள் எடுத்தாள்கிறார். அதிலும் '‘இக்காலத்தும்’ என நிகழ் காலத்தால் சுட்டுகிறார். தம் ஊர்ச்சார்புச் செய்தியாக விளங்குகின்ற அது, “புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப” என்பது (164).

“தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், தம்மாமி என்பதனைத் தந்துவை என்றும் வழங்கும்” என்றும் (400) நாட்டைச் சுட்டி எடுத்துக்காட்டுக் காட்டும் இப்பகுதியும் இவர்தம் நாட்டுச் சார்புக்குரிய சான்றாகக் கொள்ள வாய்க்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/134&oldid=1471493" இலிருந்து மீள்விக்கப்பட்டது