பக்கம்:இலக்கண வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

உரை, தொல்காப்பியர் புலமைப் பரப்பை நோக்கிக் கூறியதாம் (463)

விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமையுள் அடக்குதலும், தனியே பிரித்து எண்ணலும் என இருமுறைகளும் வடமொழியில் உண்டு என்றும், ஐந்திர நூலார் தனியே பிரித்து எண்ணுபவர் என்றும், தொல்காப்பியர் அம்மதத்தைக் கொண்டவர் ஆகலின் வேற்றுமை எட்டெனக் கொண்டார் என்றும் சேனாவரையர் விளக்கிக் கூறுகிறார். இக்கருத்தை விளக்குதற்கே “பாயிரத்துள் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று கூறப்பட்டது என்பதையும் சுட்டுகிறார் (74)

பொருள் விளங்கா நிலையில் ‘அகப்படச் சூத்திரம் செய்யார்’ (குன்றக் கூறலாக அமையார்) என்றும், ‘பொருள் விளங்க விதந்து கூறுவார்’ (விளக்கித் தெளிவுறக் கூறுவார்) என்றும் இவர் கூறுவன நூலாசிரியர் நூற்ற திறத்தை நயமுறக் கூறுவதாய் அமைகின்றன (35, 36).

பல பொருள் ஒருசொல் அமையும் வகைகளைக் கூறி அவ்வகைகளின் இலக்கணத்தைத் தனித்தனியே குறிக்கிறார் தொல்காப்பியர். அந்நூன் முறையை நயக்கும் சேனாவரையர், “இலக்கணச் சூத்திரங்களே அமையும்; இச்சூத்திரம் வேண்டா பிறவெனின், இருவகைய என்னும் வரையறை யவற்றால் பெறப்படாமையானும், வகுத்துப் பின்னும் இலக்கணம் கூறியவழிப் பொருள் இனிது விளங்கு தலானும் இச் சூத்திரம் வேண்டும் என்பது” என்கிறார். இதனால், தொல்காப்பியர் நூலியற்றிய சிறப்பைச் சுட்டும் அளவுடன் நில்லாமல், இந்நெறியைப் போற்றுதல் சிறப்பு எனப் பின்வருவார்க்கு எடுத்துக்காட்டும் தேர்ச்சியாளராகவும் சேனாவரையர் அமைதல் புலப்படுகின்றது.

ஆசிரியர் தொடுக்கும் நயத்தைத் தக்காங்கு எடுத்துரைத்தலில் தனித்திறம் காட்டுகிறார் சேனாவரையர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/136&oldid=1471495" இலிருந்து மீள்விக்கப்பட்டது