பக்கம்:இலக்கண வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiii

வெளியிட்டுச் சாதனை புரிந்துள்ளது; தமிழ்த் தொண்டில் 'ஒரு மைல் கல்'லைப் பதிய வைத்துள்ளது.

1. நூலாசிரியரின் தகுதிகள்

இந்த நூலின் ஆசிரியரான புலவர் இளங்குமரன், முறையாகத் தமிழ் பயின்றவர். தனித் தமிழ்ப்பற்று மிக்கவர். கல்வியைச் செல்வமாக மதித்து, கற்றோரைச் சுற்றமாகக் கொண்டு வாழ்பவர்.

இவர், தமிழ் நூற் பரப்பின் எல்லையைக் கண்டவர்; இலக்கிய இலக்கணச் சிந்தனைகளில் மூழ்கி முத்து எடுத்தவர்; ஆராய்ச்சி உலகில் தமக்கென நெறிமுறைகளை அமைத்துக் கொண்டவர் எதைக் கூறினாலும் தெளிவாகவும் முரண் இன்றியும் கூறுபவர்; கருத்துகளை நிரல்பட உரைப்பவர்.

இவருடைய தமிழ்நடை சிக்கல் இல்லாதது; தெளிந்த நீரோடை போன்றது.

ஆராய்ச்சியில் நடுநிலைமையும், காமஞ் செப்பாது கண்டது மொழியும் நேர்மையும் இவர்க்கு இயல்பாக அமைந்த தனிப் பண்புகளாகும்.

இவர் எழுதிய நூல்கள் பல; ஆராய்ச்சி முன்னுரையுடன் தெளிவாகப் பதிப்பித்த இலக்கண இலக்கிய நூல்கள் பல.

இத்தகைய தகுதிகள் பல வாய்க்கப்பெற்ற புலவர் இளங்குமரன் படைத்துத் தந்துள்ள ‘இலக்கண வரலாறு’ தமிழுக்குக் கிடைத்த பெருஞ்செல்வமாகும்.

2. நூலின் அமைப்பும் அழகும்

இந்த நூல், ‘இலக்கண வரலாறு’ என்ற முதற் கட்டுரையுடன் தொடங்குகிறது. இந்தக் கட்டுரை இலக்கணம், வரலாறு ஆகிய இரு சொற்களைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது. அந்தச் சொற்களின் பொருள், வழக்காறு, முன்னோர் நூல்களில் இடம் பெற்றுள்ள பாங்கு ஆகியவை பற்றிய ஆய்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது.

இலக்கண வரலாற்றுச் சிந்தனையுடன் நூலுக்குள் நுழைகின்ற நாம், அடுத்த கட்டுரையில் தொல்காப்பியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/14&oldid=1480810" இலிருந்து மீள்விக்கப்பட்டது