பக்கம்:இலக்கண வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


இளம்பூரணர் உரையையன்றிச் சேனாவரையர், காலத்திற்கு முன்னரே மற்றோர் உரை இருந்ததென்றும், வாய் வழியாக உலவிய உரை மரபுகளும் விளங்கின என்றும் அறியலாம்.

"அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
 சீர்நிலை திரியாது தடுமா றும்மே"

என்னும் நூற்பா விளக்கத்தில் (407) “‘நிரனிறை தானே’, ‘சுண்ணந் தானே’, ‘மொழிமாற் றியற்கை’ என்பனபோல ஈண்டும் ‘அடிமறிச் செய்தி’ என்பதனைக் குறளடியாக்கி, அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே பொருள்தெரி மருங்கின்’ என்று சூத்திரமாக அறுப்பாரும் உளர்” என்கிறார் சேனாவரையர். இவ்வாறு இளம்பூரணர் அறுத்தார் அல்லர். சேனாவரையர் கொண்ட பாடமே, அவர் பாடமுமாம். ஆதலால் சேனாவரையரால் சுட்டப் பட்டவர் வேறொருவர் என்பது தெளிவான செய்தி. இவர்க்குப் பின்னர் உரைகண்ட தெய்வச் சிலையார் பாடமும் இளம்பூரணர் கொண்ட பாடமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

உரையாசிரியர் பெயர் சுட்டிச் சேனாவரையர் மறுக்கும் இடங்கள் சிலவற்றில் அவ்வுரை, உரையாசிரியர் உரையில் காணப்படாமை கொண்டு உரையாசிரியர் இளம்பூரணரின் வேறொருவர் என்று கருதுவாரும் உளர். உரையைப் படியெடுத்தோர் ‘விழ எழுதுதல்’ உண்டு என்றும், சில இடங்களில் ‘இடைச் செறிப்பு’ உண்டு என்றும் பட்டாங்கு அறிவோர் ஐம்பத்திரண்டு இடங்களில் ஒரு நான்கு இடங்களில் மட்டும் உரையாசிரியர் உரையின்மை கொண்டு வேறொருவராகக் கருதார். உரையாசிரியரும் இளம்பூரணரும் ஒருவரே என்பதைத் தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரண ஆராய்ச்சி முன்னுரைக்கண் பேரா. திரு. கு. சுந்தரமூர்த்தி தெளிவுறுத்துதல் கண்டு கொள்க. (சை. சி. க. பதிப்பு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/140&oldid=1471499" இலிருந்து மீள்விக்கப்பட்டது