பக்கம்:இலக்கண வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

திற்கு முன் இருந்த நூல்களைப் பற்றி அறிகின்றோம். பின்னர் அகத்தியரையும், அவர் பெயரால் வழங்குகின்ற போலி நூல்களையும் அறிகின்றோம்.

நூலின் ஆசிரியர் தருகின்ற ஒளியின் உதவியால் தொல்காப்பியர், தொல்காப்பியம், தொல்காப்பிய உரையாசிரியர்கள் பற்றித் தெளிவான செய்திகளை அறிகின்றோம்.

இவற்றிற்குப் பின்னர் இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.

அடுத்து, பிற்காலத்து நூல்களில் குறிப்பிடப்படும் முன்னைய நூல்களைப்பற்றி அறிகின்றோம்.

பின்னர், காலமுறைப்படி தமிழில் தோன்றிய இலக்கண நூல்களையும் உரைகளையும் பற்றி அறிகின்றோம்.

மிக அண்மைக் காலத்தில் தோன்றிய நூல்வரை எல்லா நூல்களின் வரலாற்றையும் அறிந்து, தமிழ் இலக்கணத்தின் பரப்பைத் தெரிந்து கொள்கிறோம்.

இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் இலக்கண நூல் ஒன்றை அறிமுகப்படுத்தும் முறை சிறப்பாக உள்ளது. முதலில் நூலாசிரியர் வரலாற்றை - ஆய்ந்துரைக்கின்றது. அவரது காலம், வாழ்ந்த இடம், வாழ்க்கைக் குறிப்பு ஆகியவை விளக்கப்படுகின்றன. இவற்றை அடுத்து நூலின் அமைப்பு, நூற்பா எண்ணிக்கை, இலக்கணக் கோட்பாடு ஆகியவை விவரிக்கப்படுகின்றன. பின்னர் உரையாசிரியர் வரலாறும், அவரது உரைத்திறனும் ஆராய்ந்து கூறப்படுகின்றன. உரை நலனும், தனிச்சிறப்பும், உரை தோன்றிய காலத்து மக்களின் பண்பாடும் விளக்கப்படுகின்றன.

பல இலக்கண நூல்களைப் பல நாள் முயன்று படிப்பதால் பெறுகின்ற பயனை இந்த ஒரு நூலாலேயே நாம் பெறுகிறோம். நூலைப் படித்து முடித்தவுடன் ஒரு நல்ல ஆய்வு நூலைக் கற்ற மன நிறைவு ஏற்படுகிறது; நெஞ்சத்தில் தமிழ்ச்சுவை நிரம்பி இன்ப மூட்டுகிறது; சிந்தனையில் தெளிவும், புதிய செய்திகளின் ஒளியும் பரவி மகிழ்விக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/15&oldid=1480811" இலிருந்து மீள்விக்கப்பட்டது