பக்கம்:இலக்கண வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அஃது என்றும், பார்ப்பான் என்னும் சொல் தூய செந்தமிழ்ச் சொல்லாதலையும், அவ்வாறே ‘அந்தணன்’ என்னும் சொல் இருத்தலையும் எண்ணின் இவை தமிழ்நெறிய வழிபாடுகளே என்பது விளங்கும். விளங்கவே பேராசிரியர் தமிழ் நெறி வழிபாட்டாளர் என்பது உறுதியாம். ஆரியர் கூறும் தமிழை நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக இவர் கூறுதலால் அவரின் பார்ப்பார் வேறாவர் என்பது தெளிவாம்.

மேலும் “வினையின் நீங்கி” என்னும் நூற்பாவுரையில் (மர. 94), “பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவ தென்பது” என்று இவர் வரைவதும், ‘சேவற் பெயர்க்கொடை’ என்றும் நூற்பா (மர. 48) உரையில், “மாயிருந்தூவி மயில் என்றதனால் அவை தோகையுடையனவாகிப் பெண்பால் போலும் சாயல ஆகலான் ஆண்பாற்றன்மை இலவென்பது கொள்க; எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது” என்று வரைவதும் கருதத் தக்கன. இவை கட்டாயமாக நூற்பாப்பொருள் கூறும் வகையிலோ, அந்நூற்பாத் தொடரை விளக்கும் வகையிலோ' அமைந்தவை அல்ல; உரையாசிரியர் தம் பற்றுமைச் சான்றாக வெளிப்பட்டு நிற்பனவாம். ‘இறையனார்’ என்பது நூல்யாத்தவர் பெயராகக் குறிக்கப்பட்டிருக்கவும் ‘பெருமானடிகள்’ என்றது உணர்வு வெளிப்பாடேயாம். இவையும் பேராசிரியர் சமய உட்கிடைப் பொருளாவனவாம்.

நூலாசிரியரை மதித்தல் :

ஆசிரியர் தொல்காப்பியர் குறித்தும் அவர் தம் நூல்வழி குறித்தும் சில குறிப்புகளைப் பேராசிரியர் சுட்டுகிறார்.

“எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது (தொல்காப்பியம்) முன்னூலாதனின் இவரோடு (தொல்காப்பியரோடு) மாறுபடுதல் மரபன்றென மறுக்க. இசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/151&oldid=1470930" இலிருந்து மீள்விக்கப்பட்டது