பக்கம்:இலக்கண வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

நூலுள்ளும் மாறுபடுதல் அஃது அவர்க்கும் மரபன்று என்பது” என்னும் உரைப்பகுதி தொல்காப்பியர் ஆணை வழிநிற்கும் இவர்தம் செவ்வியைப் புலப்படுத்தும் (செய். 140). மேலும், “நண்டிற்கு மூக்குண்டோ எனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம்” என்னும் இவருரை (மர. 31) அவர்தம் ஆணையே ஆணையெனக் கொண்டு உரை எழுதியமை காட்டும்.

அகத்தியமே முதனூல் என்றும், அதன் வழிநூல் தொல்காப்பியமே என்றும் அதனை மறுத்துக் கூறுவது வேதவழிப்படாத இக்காலத்தார் கூற்று என்றும், இறந்தகாலத்துப் பிற பாசாண்டிகளும் (வேத வழக்கொடு மாறுபட்ட சமயத்தார்) நான்கு வருணத்தொடு பட்ட சங்கச் சான்றோரும் அது கூறார் என்றும் கூறுகிறார். மேலும் இக்கூற்றுக்குச் சான்றானவற்றை விரித்து விளக்கும் பேராசிரியர், “கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றார் ஆகலானும், பிற்காலத்தார்க்கு உரை யெழுதினோரும் அது கூறிக் கரிபோக்கினார் (சான்றுரைத்தார்) ஆகலானும், அவர் புலவுத்துறந்த நோன்புடையராகலாற் பொய் கூறார் ஆகலானும் என்பது” என்கிறார். பல்காப்பியம், பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றுச் சான்றுகளையும் இவ்விடத்தே வரிசைப்படுத்திக் காட்டித் தம் கருத்தை நிறுவுகிறார் (மர. 94).

தொல்காப்பியம் முன்னுரல் எனக் கூறும் பேராசிரியர், “மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ எனின், அவை வழிநூலே; தொல்காப்பியத்தின் வழித் தோன்றின என்பது” என்றுரைத்துப் பல்காப்பியம் காக்கைபாடினியம் இவை பற்றியெல்லாம் நிறுத்தி ஆய்ந்து கருத்துரைக்கிறார் (95). இத்தகைய அருமைப்பாடுகளையும், உரை நயங்களையும், தமிழ்நடை நலங்களையும் கண்ட பட்டறிவால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/152&oldid=1471510" இலிருந்து மீள்விக்கப்பட்டது