பக்கம்:இலக்கண வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பெற்றி” (நூன். 10).

இவை நூன்மரபில் நச்சினார்க்கினியர் காட்டும் உவமைகள். நச்சினார்க்கினியர் உரையால் மட்டுமே அறியப்படும் நூல்கள் சில உள. அவற்றுள் சீரிய ஒன்று ‘பெரும் பொருள் விளக்கம்’ என்பது. அந்நூலைப் புறத் திரட்டு வழியால் பெயரறிந்து கொள்ளவும் ஒப்பிட்டுக் காணவும் வாய்க்கின்றது. புறத் திரட்டில் காணாத பாடல்கள் மிகப் பல புறத்திணை இயலில் இடம் பெற்றுத் தனி நூலாம் அளவிற்கு விரிவுடையனவாக உள்ளன. களவியல் கற்பியல்களிலும் புறத்திணையியலில் காணப்படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்களை அன்னவை எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. அவற்றை நோக்க அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் கூடிய பொருளின் முழுப்பரப்பும் தழுவிய நூலாக அந்நூல் இருந்திருத்தல் கூடுமென அறிய வாய்க்கின்றது. தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்பவற்றிலிருந்தும் அரிய பாடல்களைப் பரிசிலென வழங்குகின்றார்.

வரலாற்றுச் செய்தி

புறத்திணையியலில் நச்சினார்க்கினியர் காட்டும் வரலாற்றுச் செய்திகள் மிகப் பலவாம்.

“ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம்” (புறத். 7).

அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில் கிழார் பொன்முடியார் ஆகியோர் பாடிய தகடூர் யாத்திரைப் பாடல்களைக் குறிக்கிறார் (புறத். 8).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/171&oldid=1471544" இலிருந்து மீள்விக்கப்பட்டது