பக்கம்:இலக்கண வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி (நக்கண்ணையார்), ஒத்த அன்பினாற் காமுறாதவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமுற்றுக் கூறியதை காமப் பகுதி கடவுளும் வரையார் என்னும் நூற்பாவில் (புறத். 28) எடுத்துக் காட்டுகிறார்.

தமிழகத்துச் செய்தியாம் இவையன்றி அக்காலத்தில் தமிழில் வழங்கிய இராமாயண பாரதப் பழநூல்களில் இருந்து (அவை அகவற்பாவால் இயற்றப்பட்டவை) மேற்கோளும் செய்திக் குறிப்பும் காட்டுகிறார்.

கொள்ளார் தேஎங்குறித்த கொற்றத்திற்கு (புறத். 12) “இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது” என்கிறார்.

“செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ, ஒருவன் மண்டிய நல்லிசை நிலை” என்பதற்கு (17) “குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் ஐவரையும் கொன்று வென்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன” என்கிறார்.

இவ்வாறு இராமாயண பாரதச் செய்திகளை எடுத்துக்காட்டுவதுடன் தொன்ம (புராண)ச் செய்திகளையும் சுட்டுகிறார்.

“இரணியனைப் போல வலியானும் வருத்தத்தானும் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று” என்பது ஒன்று (புறத். 19).

‘முழுமுதல் அரணம்’ என்பதை விளக்கும் நச்சினார்க்கினியர் (புறத். 10), "முழு அரணாவது மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/172&oldid=1471532" இலிருந்து மீள்விக்கப்பட்டது