பக்கம்:இலக்கண வரலாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

129 மரபு நிலை மாற்றாமல் ‘கோயில்’ என்றே கொண்டார் என்பது அறியத்தக்கது. ‘கோவில்’ என்பது 19-ஆம் நூற்றாண்டு உரைநடைக் காலத்து வந்த தவறான புது வழக்கு.

வழக்குகள்

‘புடோலங்காய்’ என்பதைப் புள்ளிமயங்கியல் புற நடையில் (110) எடுத்துரைக்கிறார் நச்சினார்க்கினியர். ‘புடலங்காய்’ என்பது அவர் காலத்தில் அவ்வாறு வழங்கிற்றுப் போலும்!

‘ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க’ என்கிறார் (உயிர். 67). இவ்வாறு காலவழக்கு இடவழக்கு ஆகியவற்றைச் சுட்டுதலையும் இவர் வழக்காகக் காணலாம்.

மாட்டின் விளைவு

‘மாட்டு’ என்பதோர் இலக்கணத்தைத் தொல்காப்பியர் செய்யுளியலில் கூறுகின்றார். ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைப்பார் போல அவ்விலக்கணம் கொண்டு நச்சினார்க்கினியர் மாட்டிச் செல்லும் தனிச் செலவில் அவர்க்கு ஒப்ப ஒருவர் இதுகாறும் இருந்தார் இலர். அம் மாட்டுரையே, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலியவற்றுக்கு மறைமலையடிகளாரைப் புத்துரை காண ஏவிற்று. நெடுநல்வாடை, முருகாற்றுப்படை ஆயவற்றுக்குக் கோதண்டபாணியாரை நயவுரை காணத் தூண்டிற்று! இவருரையில் அமைந்துள்ள சில நூற்பாக்களின் பொருட்போக்கே நாவலர் பாரதியாரைத் தொல்காப்பியம் புத்துரை காண அழுத்திற்று. இவையும் நச்சினார்க்கினியர் கொடையெனின் கொள்ளத்தக்கதாம். இ.வ—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/174&oldid=1471535" இலிருந்து மீள்விக்கப்பட்டது