பக்கம்:இலக்கண வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________


கிளவி” என்பதற்குச் சேனாவரையரைத் தழுவி உரை வரையும் இவர், “நாணுவரை இறந்தாள் தன்மை யளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு” என்கிறார் (167).

ஆனால், தெய்வச்சிலையாரோ “விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகள் என்பது பண்டையோர் வழக்கு” என்றார். இதனால் தெய்வச்சிலையார் கல்லாடர்க்குப் பிற்பட்டவராக இருத்தல் வேண்டும் எனக் கொள்ளலாம்.

பிரயோக விவேக நூலார் “மக்கட் சுட்டு என்பதனைக் கல்லாடனாரும் பின்மொழியாகுபெயராய் நின்ற இரு பெயரொட்டுப் பண்புத் தொகை என்பர்” என்று கல்லாடர் பெயரைச் சுட்டிக் கூறுகிறார் (பிரயோக. 22 உரை). ஆதலால் அவர்க்கு முன்னரும் நச்சினார்க்கினியர்க்குப் பின்னருமாம் காலத்தில் அதாவது 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர் எனக் கொள்ளலாம்.

காடு

முன்னவர்கள் உரையையே வாங்கிக்கொண்டு எழுதும் இவர் நும்நாடுயாது என்னும் வினாவுக்குப் பாண்டிநாடு என்று விடை கூறுவது கொண்டு பாண்டி நாட்டவர் என உறுதி செய்ய முடியாது எனினும் கல்லாடம் பாண்டி நாட்டகத்ததோர் ஊர் என அறியப்படுதலாலும், மாறோகம் கொற்கைப்பகுதி ஆதலாலும், அதனைச்சுட்டி ‘இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர்’ என்று பாண்டிநாட்டு ஆற்றூர்ச் சேனாவரையர் வழங்குமாறே வழங்குதலாலும் இவர் பாண்டி நாட்டவர் ஆகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/176&oldid=1471539" இலிருந்து மீள்விக்கப்பட்டது