பக்கம்:இலக்கண வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

13

அவனினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்தான் கொற்றா என்ற வழி, செய்கின்றான் முதல் வேற்றுமையாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க” என்று இலக்கண மரபினைப் போற்றுகிறார்.

‘எல்லாம்’ என்பது உயர்திணைப் படர்க்கையிலும் முன்னிலையிலும் வருவனவற்றை எடுத்துக் காட்டி “அவை இலக்கண வழக்கல்ல” (182) என்று மறுப்பு வகையாலும் மரபினைக் காக்கிறார்.

அஃறிணைக்கண் தன்மைக்கூற்று நிகழாது என்பதை, “கிளியும் பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையாலும், அவை உரைக்குங்கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலானும், ஒருவன் பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக் கருவியும் உரையாடிற்றாதல் வேண்டுமாகலாலும் அவ்வாறு வருவன மக்கள் வினை யாதலால் தன்மைவினை அன்றென்க” என உவமை நயத்துடன் விளக்கி மரபு காக்கிறார் (210).

இத்தகையவர், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே’ என்னும் நூற்பாவின் விளக்கத்தில் ஓருரை உரைத்துப் பின்னர், இன்னும் எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும் என்றவாறு, எனவே, இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல என்றவாறாம். என்னை உரிமை இலவாகியவாறு எனின், உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப்பாடைக்கும் ஒப்பு முடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க. எனவே பொருள் பற்றி வரும் பெயரெல்லாம் இடுரகுறி என்பது பெறப்பட்டது” (151), என்பது வியப்பாக உள்ளது. இது நூலாசிரியர் கருத்தொடு மட்டுமன்றி, தாம் உரைத்த உரைக்கும் முரணாக உண்மை புலப்படுகின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/188&oldid=1471567" இலிருந்து மீள்விக்கப்பட்டது