பக்கம்:இலக்கண வரலாறு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144


சில வழக்குகள்

தைந்நீராடல், ஈழத்திற்கு ஏற்றின பண்டம், சுக்ரீவன் துணையாக இலங்கை கொண்டான் என அக்கான வழக்குகள், தொன்மக் குறிப்புகள் ஆகியவற்றை ஆங்காங்குக் காட்டுகிறார்.

‘கூப்பிடு தொலைவு’ என நீட்டல் அளவும், ‘அந்தணி’ என அந்தணனுக்குப் பெண்பாலும், நெயவு தொடர்பான பல செய்திகளும் நாண்மீன் கோண்மீன் குறிப்பும் இன்னபிறவும் இவர் உரைக்கண் காண வாய்க்கின்றன.

அரசன் வலத்திருந்தான் அமைச்சன்: அரசன் இடத்திருந்தான் சேனாபதி என அரசிருக்கை காட்டுகிறார்; இந்நாளில் வேளாங்கன்னி என்றும், வேளாங்கண்ணி என்றும் வழங்கப்படுவது வேளாண்காணி அல்லது வேளார் காணி என்பதோ என்று நினைக்க வைக்கிறார்:

“வேளார்காணி என்பது வேளார் காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரால் வழங்குதலின் ஆகுபெயராயிற்று” என்பது அது (111). அடுத்த நூற்பாவுரையிலும் வேளார் காணியைக் குறிக்கிறார் (112). செப்பு வகை நான்கனுள் வாய்வாளா திருத்தலையும் (மறுமொழி கூறாதிருத் தலையும்) ஒன்றாகக் கூறுகிறார். ஆகாபப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை என்கிறார் (13).

தொல்காப்பியம் என்பதற்கும் இவர் இலக்கணம் கூறுகிறார்: “தொல்காப்பியம் என்பதோ எனின் அஃது ஈறு திரிந்து நின்று, அவனால் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது; காரணப் பெயராம்.” என்பது அது (111).

அரிய செய்திகளையும் எடுத்துக்காட்டு நயங்களையும் உடையது தெய்வச்சிலையார் உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/189&oldid=1471575" இலிருந்து மீள்விக்கப்பட்டது