பக்கம்:இலக்கண வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


உரைநிலை

அகத்திய நூற்பாவெனப் பிறர்காட்டாத நூற்பா வொன்றைக் காட்டுகிறார் (80) இவர். “முதலொடு குணம்இரண் டடுக்குதல் வழக்கியல், சினையோடடுக்குதல் செய்யு ளாறே” என்றொரு நூற்பாவைக் காட்டி ‘இது புறச்சூத்திரம்’ என்கிறார் (26). இஃதிவரே இயற்றியதாகலாம்.

தொல்காப்பியம், கபிலம், கபிலரது பாட்டு, பரணரது பாட்டியல், பாரியது பாட்டு, மாதாநுபங்கியாவார் திருவள்ளுவதேவர் எனச் சிறப்புப் பெயர்கள் சில ஆள்கின்றார். கருவூர் காவிரிப்பூம்பட்டினம் என ஊர்ப் பெயர்கள் சில குறிக்கின்றார். இவற்றுட் பலவும் பிறர் ஆண்டனவே.

பெற்றம் இருபாற்கும் பொது என்றும், அவ்வாறே எருமையும் பொது என்றும் குறிக்கிறார்.

“நூறு விற்கும் பட்டாடை உளவோ என்றார்க்கு ஐம்பது விற்கும் கோசிகம் அல்லது இல்லை” என்பது, இவர் காலத்தில் பட்டும் துணியும் கொண்டிருந்த விலைமானக் குறிப்பாகலாம் (35). “எவன் என்பது இக்காலத்துள் ‘என்’ என்றும், ‘என்னை’ என்றும் திரிந்தும் நடக்கும்” (31) எனக் காலநிலை குறிக்கிறார்.

“ஒரு மக்கட்டலை ஓடு காட்டுள் கிடந்தது கண்டு பெண்தலை ஆண்தலை என்று உணராதான் பெண்டாட்டி தலை கொல்லோ ஆண்மகன் தலை கொல்லோ இஃதோ கிடந்த மக்கட்டலை” என்று இவர் கூறுவது, மாந்தரின ஆய்வின் மூலமாகத் திகழும் மண்டையோட்டு ஆய்வை நினைக்கத் தூண்டுகின்றது (23).

கூடு, களஞ்சியம், குதிர், புரை, மறிசல், தொம்பை என்பன தவசம் போட்டு வைக்கும் இடத்தை அல்லது செய்பொருளைக் குறிக்கும். இவற்றுடன் ‘மச்சு’ என்பதும் தவசக் கொட்டிலைக் குறித்தல் பாண்டிநாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/191&oldid=1471576" இலிருந்து மீள்விக்கப்பட்டது