பக்கம்:இலக்கண வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


நெல்லை மாவட்டம் சார்ந்த விக்கிரம சிங்கபுரத்தில் ஆனந்தக் கூத்தர், மயிலம்மை என்பார் திருமகனாராகப் பிறந்தவர். முக்களாலிங்கர் என்னும் பிள்ளைப் பெயரினர். சுசீந்திரம் ஈசானமடம் வேலப்ப தேசிகரிடம் இளம் பருவத்திலேயே தீக்கை பெற்றுத் துறவு பூண்டவர். சிற்றிலக்கியங்கள் பல இயற்றியவர். சிவஞான போதத்திற்குப் பேருரையும் சிற்றுரையும் தந்தவர். மறுப்பு நூல் எழுதுதலில் அந்நாளில் ஒரு தாமாகக் கொடிகட்டிப் பறந்தவர் எனத்தக்கார்.

“வடவேங்கடம் தென்குமரி”, எனத் தொடங்கும் தொல்காப்பியப் பாயிரத்திற்குப் பொருளும் விளக்கமும் முதற்கண் வரைகின்றார். ‘நூலுக்குத் தொல்காப்பியச் சூத்திர விருத்தி’ என்றே பெயர் சூட்டியமை தற்சிறப்புப் பாயிரத்தால் விளங்குகின்றது.

“வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்”

எனத் தொடங்கும் 33 அடி அமைந்த ஆத்திரையன் பேராசிரியன் கூறிய பொதுப்பாயிரத்தை நூன்முகப்பில் வைக்கிறார். தொல்காப்பியப் பாயிரத்திற்குச் சொற்பொருள் எழுதி விளக்கம் செய்கிறார்.

“தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார், அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பு என்னும் இயைபுபற்றி என்பது” என வடவேங்கடம் முன்வைத்த முறைமைக்குக் காரணம் காட்டுகிறார்.

நச்சினார்க்கினியர் இளம்பூரணர் பரிமேலழகியார் ஆகியோரை மறுப்பதுடன் சேனாவரையரையும் மறுப்பார். ஏனெனில் சேனாவரையரை, வடநூற் கடலை நிலைகண்டறிந்த சேனாவரையர் எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தாராயின் இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்துரைப்பர். அவர் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/194&oldid=1471579" இலிருந்து மீள்விக்கப்பட்டது