பக்கம்:இலக்கண வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155


படிக்க வேண்டும். இப்பொழுது தொல்காப்பியத்தைப் படிக்கும் தமிழர்கள் நச்சினார்க்கினியர் கண்கொண்டு படிக்கிறார்கள்" என்று வருந்திக் கூறினார்.

“தமிழ் நூல்களுக்கு வடநூற் சார்பு கற்பித்துக் கொள்வதே பெருமையெனக் கருதிய இடைக்காலத்தவர், தமிழ்த் தொல்காப்பியரை ஆரியப் பார்ப்பனராக்கிய தோடமையாமல், அவரை இல்லா அகத்தியற்குப் பொல்லா மாணாக்கருமாக்கி முடித்தார். தொல்காப்பியர் என்னும் அவர் தமிழ் நூற்பெயரையும் தொல்காப்பியம் என வடநூல் தத்திதாந்த விதிப்படி திரித்து வழங்கலாயினர். இது இந்நூற் பாயிர வரலாற்றுக்கும் தமிழ் இலக்கண மரபுக்கும் முற்றிலும் முரணும் தவறு. தொல்காப்பியன் என்பதே இந்நூல் இயற்றிவார்க்கு இயற்பெயரும், அவர் நூலுக்கு ஆகுபெயருமாம்”. இது தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பியர் பற்றியும் நாவலர் கொண்ட கருத்தாகும்.

“நான்கு வருணம் ஆரியர் அறநூல்களே கூறும் வகைகள் ஆதலானும் பண்டைத் தமிழருட் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுகளுடன் வேறுபடும் அந்நால்வகை வருணங்கள் உலகியலில் வழங்காமையானும், தொல்காப்பியர் தாம் தமிழ் மரபுகளையே கூறுவதாக வற்புறுத்தலானும், அகத்திணையியலில் தமிழர் நாட்டு நானில மக்கள் குறிக்கப்படுகின்றாரன்றி நான்கு வருணத்தாராய்த் தமிழ் மக்கள் யாண்டும் கூறப்படாமையானும் அவருரை அமைவுடையதன்று” எனப் பழையோர் உரைகளை நாவலர் மறுக்கும் வகை (அகத். 27) அவர் புத்துரை செய்ய நேர்ந்த நோக்கினை வெளிப்படுத்தும்.

நாவலர் பாரதியார் அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்றியல்களுக்கு உரை கண்டார். பொருளதிகாரம் என்பதைப் பொருட்படலம் என்றார். கட்டுரைகன் சில தொல்காப்பியம் குறித்து எழுதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/200&oldid=1471607" இலிருந்து மீள்விக்கப்பட்டது