பக்கம்:இலக்கண வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

"இறையனார்' எனப்பட்டு, அவர்தம் பெயர் இயல் செயல் ஆயவற்றால் இறைமைத் தன்மை ஏற்றப் பெற்று, இறைவனாகவே புனைவித்திருக்கக் கூடும் எனக்கொள்ளலாம். ஆய்வுக் குரியது இது என இவ்வளவில்-அமைவோம்.

பாயிரம்

தொல்காப்பியத்தில் பாயிரம் உண்டு. இறையனார் களவியல் உரை, "ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், பாயிரம் இல்லது பனுவல் அன்றே என்று பெரிது விரித்து விளக்கம் கூறிக் காக்கை பாடினிய — தொல்காப்பியப் பாயிரங்களையும் மேற்கோள் காட்டுகின்றது. ஆனால், இக்களவியலில் பாயிரம் இல்லை. ‘அன்பின் ஐந்திணை’ என்று நூல் தொடங்கி விடுகின்றது. ஆகலின் பாயிரச் செய்திகளை உரையாசிரியர் வருவித்துரைக்க நேர்ந்துளது. இந்நிலையும் பல்வேறு புளைவுகளுக்கும் இடத் தருவதாயிற்று.

நூலளவு

தொல்காப்பியத்தில் அகத்திணையியல் (55), களவியல் (50), கற்பியல் (33), பொருளியல் (34) ஆகியவை முற்றாக (212 நூற்பாக்கள்) அகப்பொருள் பற்றியன. மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல் ஆகியவற்றிலும் அகப்பொருள் செய்தியுண்டு. இவற்றுள் 55 நூற்பாக்களையுடைய அகத்திணையியலில் தனிச்சொல் நீங்கிய முற்றடிகள் மட்டும் 155. இறையனார் களவியல் முழுமையும் 60 நூற்பாக்களில் அடங்கி விடுகின்றது. அந்நூற்பாக்களின் அடிகளுள் முற்றடி 144: சிந்தடி 1. தனிச்சொல் 4. அவ்வளவே. இவற்றுள்ளும் 59 ஆம் நூற்பாவில் உள்ள பின் ஈரடிகள் (கிளந்தவல்ல... கொளலே) தொல்காப்பியத்தில் ஈரிடங்களில் வரும் (602, 781) ஒரு நூற்பா. இதனை நோக்கும்போது களவியலின் அளவுச் சுருக்கம் புலப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/215&oldid=1472498" இலிருந்து மீள்விக்கப்பட்டது