பக்கம்:இலக்கண வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

களவியல் நூற்பாக்கள் அளவால் சுருங்கினும் செறிவு மிக்கவை; இயல்பான ஓட்டம் உடையவை; பொருள் விரிப்புக்கு வேண்டுமளவு இடந் தருபவை. நூற்பா இலக்கணங்கள் முற்றாக அமைந்த சிறப்புடையவை. ஓரோர் அடியால் வரும் நூற்பாக்களே 15 உள்ளன . ஒரோ ஒரு நூற்பா சிந்தடி ஒன்றாலேயே அமைந்துள்ளது (22). ‘அம்பலும் அலரும் களவு’ என்பது அது. நூற்பாவுள் பேரளவு 10 அடி; அவ்வாறமைந்தது 12-ஆம் நூற்பா. நூற்பாச் சுருக்கமும் அமைதியும் உரைப் பெருக்கத்திற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளன. ஓராற்றான் சிவஞான போதச் செறிவையும் நூற்பாக்கள் நினைவுறுத்துகின்றன.

பகுதி நூல்

தொல்காப்பியத்திற்குப் பின்னர் முழுதிலக்கணம் தழுவாத பகுதி யிலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின. அவ்வகையில் அகப்பொருள் பற்றிக் கூறும் நூலாகத் தோன்றியது இந்நூல்.

களவியல் முதல் நூற்பா,

“ அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்”

என்கிறது. தொல்காப்பியத்திலுள்ள களவியல் முதல் நூற்பா,

“ இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”

என்கிறது. இவற்றை ஒப்பிட்டுக் கண்டால் தொல்காப்பியப் பிழிவாகக் களவியல் அமைதல் புலப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/216&oldid=1472499" இலிருந்து மீள்விக்கப்பட்டது