பக்கம்:இலக்கண வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxi

5. குமரகுருபரர் இயற்றிய சிதம்பரச் செய்யுட் கோவை, இலக்கியம் காட்டி (அதற்கு) இலக்கணம் காட்டலாக அமைந்திருப்பது புதியதோர் முறை (பக்.360).

7. வரலாற்றுப் புலமை

தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை அவர்கள் இயற்றிய நூல்களில் உள்ள பாயிரங்கள் கூறும் செய்திகளைக் கொண்டே அறியவேண்டியுள்ளது. இன்னும் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அறிவிக்கின்றன.

தமிழ் ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஆழ்ந்து கற்றுப் புலமை பெறுகின்றனர். அந்தப் புலமை வளத்தால், பல செய்திகள் விளக்கம் பெறுகின்றன.

இந்த நூலின் ஆசிரியர் நூற்பாயிரம் கூறும் புலவர் வரலாறுகளை மட்டுமே அல்லாமல், கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் சிறந்த சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து அரிய செய்திகளை வெளியிட்டுள்ளார். நூலாசிரியர் உரையாசிரியர் ஆகிய இருசாரார் பற்றியும் அறிய அவை துணைபுரிகின்றன. அவர்கள் வாழ்ந்த காலம், இடம், மேற்கொண்ட தொழில், செய்த அறச்செயல், பெற்ற பரிசு ஆகியவை பற்றி விளக்கியுள்ளார்.

இந்த நூலின் தொடக்கத்தில் அகத்தியர் பற்றியும், அவர் பெயரால் வழங்கிவரும் போலி நூல்களைப் பற்றியும் கூறியுள்ள கருத்துகள் நூலாசிரியரின் வரலாற்றுப் புலமைக்குச் சான்றாக உள்ளன (பக். 19-33).

சேனாவரையர், (பக். 88), யாப்பருங் கலக்காரிகை ஆசிரியர் (பக். 218), தேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் (பக். 257), நன்னூலை இயற்றிய பவணந்தியார் (பக். 279-282), சிதம்பரப்பாட்டியல் இயற்றிய பரஞ்சோதியார் (பக். 340), பிரயோக விவேகம் இயற்றிய ஆழ்வார் திருநகரி சுப்பிரமணிய தீட்சிதர் (பக். 362), தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர் வீரமாமுனிவர் (பக். 387), அறுவகை இலக்கண நூலின் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் (பக். 423.424) ஆகியோர் வாழ்ந்த இடமும் காலமும், மற்றச் சிறப்புச் செய்திகளும் மிக விளக்கமாக ஆசிரியரால் ஆய்ந்து கூறப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/22&oldid=1480818" இலிருந்து மீள்விக்கப்பட்டது