பக்கம்:இலக்கண வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

தலைவியாம் மயில் நோக்கிய மயிலின் காட்சியை இயற்கைச் சூழலொடு பொங்கித் ததும்பிவரும், அருவியெனக் கொழிக்கிறார். இஃது உரையா? பாட்டா? உரைப்பாட்டா? ‘வஞ்சி’ நடை பயின்று வந்த காட்சிக்கு வஞ்சி நடையே தகுவதெனக் கொஞ்சு தமிழ் கொழிக்கிறார். இத்தகு நயங்களை விடக்கூடாது எனின் அந்நூலை விடக்கூடாது என்பதே.

முச்சங்க வரலாறு விளக்க மிக்க வகையில் முதற்கண் அறியப்படுவது இக்களவியல் உரையாலேயே யாம். ‘பாண்டிக்கோவை’ என்னும் கோவை நூல் நமக்குக் கிடைத்தது இவ்வுரையாலேயாம். இவ்வுரைக்கு முன்னரும் உரைகள் இருந்தன என்பதற்கு அகச்சான்றாக அமைந்ததும் இவ்வுரையே. இவ்வாறு இவ்வுரைச் சிறப்பு பலபடக் கிடப்பதாம்.

‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுத்தொகைப் பாடலை இயற்றிய இறையனாரை இந்நூல் இயற்றிய இறையனார் என இவ்வுரைகாரர் கொண்டிலர் என்பது அப்பாடலை எடுத்துக்காட்டி 'வாளா' அமைதலால் புலப்படுகின்றது (2).

உரைநயம்

உலகியல், பழமொழி, பழக்க வழக்கம், பண்பியல் இன்னவற்றை ஆங்காங்குச் சுட்டிச் செல்கிறார் உரையாசிரியர்:

“உலகத்தோர் இடுக்கண் உற்றால் விதியானே தீரும் என்று இரார். முன்னம் தீர்த்தற்குச் சுற்றத்தாரையும் நட்டாரையும் நினைப்பர்” (3) என்கிறார். காரணம் ஏதொன்றும் இன்றியும் குழந்தை அழுதலை உவமையாகக் கூறுகிறார் (18). ‘போகாக் குமரியை உடையார்போலக் கதுமென நேர்ந்திடார்’ என்று மகக்கொடை நிலையைக் குறிக்கிறார் (29). ‘யாறு வருகின்ற தென்று ஆடை தலைச் சூடார்’ என்பதைச் சுவை மிகக் கூறுகிறார் (50).இ.வ–12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/222&oldid=1472518" இலிருந்து மீள்விக்கப்பட்டது