பக்கம்:இலக்கண வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxii


8. புலமைத் திறன்

டாக்டர் உ. வே. சா. அவர்களால் 1937இல் பதிக்கப்பட்ட ‘தமிழ் நெறி விளக்கம்’ என்னும் அகப்பொருள் இலக்கண நூலில், ‘முக்கண் கூட்டம்’ (நூற்பா , 21) என்ற தொடர் ஒன்று வருகின்றது. அதனை ஆராய்ந்த உ. வே. சா அவர்கள், “முக்கட் கூட்டம் இன்னதென்று விளங்கவில்லை” என்றும் “மக்கட் கூட்டம் என்று இருத்தல் கூடும்” என்றும், “இந்த ஐயமும் வேறு பிறவும் நாளடைவில் தெளிவாகும்” என்றும் கூறியுள்ளார். (முகவுரை. V, VI).

இதனை ஆராய்ந்த இந்நூலின் ஆசிரியர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

“முக்கட் கூட்டம் என்பதே சரியான வடிவம். கண் இடப்பொருளது. முக்கண் மூவிடம். அம்மூவிடங்கள் 1. இயற்கையால் கூடுமிடம்; 2. தோழியால் கூடுமிடம்; 3. தோழனாற் கூடுமிடம் என்பவை”' (பக்.213).

இந்த ஆய்வுரை ஆசிரியரின் புலமைத் திறனுக்குச் சான்றாய் உள்ளது.

“சார்ச்சி வழி ஒழுகுதல்” என்பதை, “எங்கோ இருக்கும் ஒரு நூற்பாவின் தொடரை, எங்கோ கொண்டு வந்து இயைத்துப் பொருள் கூறுதல்” என்று விளக்கியுள்ளார் ஆசிரியர் (பக். 197). இந்த விளக்கம் ‘மாட்டேறு’ என்பதை நினைவூட்டுகிறது.

9. அயரா உழைப்பும் தளரா முயற்சியும்

இந்த நூலாசிரியரின் அயரா உழைப்பிற்கும் தளரா முயற்சிக்கும் சான்றாய் விளங்குகிறது. ‘பிரபந்தத் திரட்டு’ என்னும் நூலைப் பற்றிய கட்டுரை. அந்த நூல் இன்று வரை அச்சாகவில்லை. உ. வே. சா. நூலகத்தில் ஏட்டுச் சுவடியாகவே உள்ளது. அதனை அறிந்து தேடிச் சென்று படி எடுத்து முயன்று படித்து ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

10. ஆய்வுத் திறன்

நூலாசிரியரின் ஆய்வுத் திறன் வெளிப்படும் இடங்கள் நூலெங்கும் நிரம்பியுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/23&oldid=1480819" இலிருந்து மீள்விக்கப்பட்டது