பக்கம்:இலக்கண வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

கலாவியல்

நவநீதப் பாட்டியல் வழியே அவிநயனார் இயற்றிய ‘கலாவியல்’ என்பதொரு நூல் இருந்தமை அறிய வருகின்றது. அதில் அவை புகு நெறி பற்றிய ஒரு நூற்பா (91):

“அவைபுகு நெறியே ஆயுங் காலை
வாயிலின் நிரைத்துக் கூறப்புகுங் காலை
இருவரும் புகாஅர் ஒருவர் முன்புகிற்
புக்கவன் தொலையும் உய்த்தெனும் உண்மையின்
இருவருங் கூடி ஒருங்குடன் பட்ட
தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர் என்ப”

என்பது.

பாவைப்பாடல்

ஓர் அரிய பாவைப் பாடலை அவிநயனார் காட்டியதைக் காரிகை கூறுகின்றது (43). அது:

“கோழியும் கூவின குக்கில் குரல்காட்டும்
தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்திக்
கூழை நனையக் குடைதுங் குரைபுனல்
ஊழியு மன்னுவாம் என்றேலோர் எம்பாவாய்”

என்பது. இஃது ஐந்து அடியான் வந்த தாயினும் ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்தி வழங்கப்படும் என்கிறது காரிகையுரை.

ஆ. காக்கை பாடினியம்

காக்கை பாடினியார் பெண்பாற் புலவர் என்பது அவர் பெயரானே விளங்குகின்றது. பாடுவதையே தொழிலாகக் கொண்ட பழந்தமிழ்க் குடியினர் பாணர் எனப்பட்டனர். அப்பாணர் குடிப் பெண்டிர் ‘பாடினி’ எனப்பட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/231&oldid=1472849" இலிருந்து மீள்விக்கப்பட்டது