பக்கம்:இலக்கண வரலாறு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

கொள்கின்றன. தொல்காப்பியனார் நாலசைச்சீர் கொள்ளார். இவர் ‘நாலசையாலும் நடைபெறும்’ என்று வருமிடமும் குறித்தார். தொல்காப்பியர் வண்ணகம் என்பதை ‘அராகம்’ என ஆண்டார் இவர். இவ்வழக்குப் பின்னே பெருக்கமாயிற்று. யாப்பு மட்டுமே காக்கை பாடினியார் செய்தார் என அவர் நூற்பாக்களைக் கொண்டு அறிய வாய்க்கிறது. இவர் நூலை முதனூலாகக் கொண்டே யாப்பருங்கலம் செய்யப்பட்டது என்பது விருத்தியுரை வழியே மிக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

முதனூல்

“காக்கை பாடினியார் முதலாகிய தொல்லாசிரியர்”, “காக்கை பாடினியார் முதலிய மாப்பெரும் புலவர்,” “காக்கை பாடினியார் முதலாகிய மாக்கவிப் புலவோர்” என் விருத்தியுரை பாராட்டுகின்றது.


“தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனார்பகுத்துப் பன்னினார்
— நல்யாப்புக்
கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார்
சொற்றார்தம் நூலுள் தொகுத்து”

என்னும் வெண்பா யாப்பருங்கல விருத்தியுள் வருகின்றது. இதனால் காக்கைபாடினியார் தொகை வகையில் நூல் செய்த தகைவகை புலப்படும்.

இக்காக்கை பாடினிய நூற்பாக்கள் பெரும்பாலும் மேற்கோள் வகையால் கிடைத்தமை கொண்டு ஒழுங்குறுத்தி உரை விளக்கம் கண்டு சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வழியாக 1974-இல் வெளியிட்டுள்ளேன். அதன் ஆராய்ச்சி முன்னுரை இன்னும் விரிந்த செய்திகளையுடையதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/234&oldid=1472852" இலிருந்து மீள்விக்கப்பட்டது