பக்கம்:இலக்கண வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இ. சங்க யாப்பு


‘சங்க யாப்பு’ என்னும் பெயருடைய நூலை யாப்பருங்கல விருத்தி எடுத்துக்காட்டிச் சில நூற்பாக்களையும் தருகின்றது. இது யாப்புப் பற்றிய நூல் என்பது பெயராலேயே அறிய முடிகின்றது. ஆனால், பாவினங்களுக்குரிய இலக்கணம் இதில் இடம் பெற்றிருப்பதால் ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம். பாவினங்களுக்குச் சில எடுத்துக்காட்டுக் கூறும் பாப்பருங்கல விருத்தி “பிறவும் சங்க யாப்பிற் கண்டு கொள்க” என்கிறது.

நூலமைதி

யா. வி. காட்டும் நூற்பாக்களில் வரும் உயிர், மெய், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம், மாத்திரை, குற்றியலுகர குற்றியலிகர வடிவு ஆகியவற்றை அறிய யாப்பிலக்கணம் கூறினார் எனினும் எழுத்திலக்கணமும் விளங்க உரைத்தார் சங்க யாப்புடையார் என்று கொள்ள முடிகின்றது.


“அகர முதலா ஒளகாரம் ஈறா
இசையொடு புணர்ந்த ஈராறும் உயிரே”
“ககரம் முதலா னகரம் ஈறா
இவையீ ரொன்பதும் மெய்யென மொழிய”

இவை உயிரெழுத்து, மெய்யெழுத்து பற்றிய நூற்பாக்கள்.

மகடூஉ முன்னிலை அமையும் நூற்பா இயற்றினார் என்பது,

" கண்ணிமை கைந்நொடி என்றிவை இரண்டும்
மின்னிடை! அளவே எழுத்தின் மாத்திரை"

என்பதால் விளங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/235&oldid=1472853" இலிருந்து மீள்விக்கப்பட்டது