பக்கம்:இலக்கண வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

சில இலக்கணங்கள்:

சிறுகாக்கை பாடினியார் ஆசிரியப் பாக்களுள்,

“இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி
பெறுவன நேரிசை யாசிரி யம்மே”

“இடை இடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்”

“கொண்ட அடிமுத லாயொத் திறுவது
மண்டில யாப்பென வகுத்தனர் புலவர்”

என நேரிசை யாசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, மண்டில ஆசிரியப்பா ஆகிய மூவகையின் இலக்கணத்தைக் குறிப்பிடுகிறார். மண்டில ஆசிரியத்திலேயே நிலை மண்டிலம், அடிமறி மண்டிலம் ஆகிய இரண்டன் இலக்கணத்தையும் இயைத்துக் கொண்டார் எனக் கருதும்படி உள்ளது. ‘கொண்ட அடிமுதலா’ என்பதால் அடிமறி மண்டில இலக்கணத்தை அமைத்துக் கொள்ளும் வண்ணம் நூற்பா நூற்றுள்ளார் என்பதை நுணுகிக் கண்டு கொள்ளலாம். அதற்கென உரை காணாமையின், மூவகை ஆசிரியத்திற்கே இலக்கணம் கூறினரோ, யாப்பருங்கல விருத்தியுடையார் அடிமறி மண்டில இலக்கணம் கூறிய நூற்பாவை எடுத்துக் காட்டினர் இலரோ என மயங்க நேர்கின்றதாம்.

மறைந்துபோன தமிழ் நூல்கள் சிறுகாக்கை பாடினியாரின் 31 நூற்பாக்களை ஒழுங்குபடுத்தி வைத்துள்ளது. காக்கை பாடினியார் பெண்பாற் புலவராதல்போல் இவரும் பெண்பாற் புலவர் எனலாம்.

உ. நத்தத்தம் (நற்றத்தம்)

தத்தனார் என்றும் பெயருடையவர் ‘நல்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்று நற்றத்தனார் என வழங்கப்பட்டுப் பின்னர் ‘நத்தத்தனார்’ என்றாகியிருக்கக் கூடும். ‘நற்றத்தனார்’ என்றும் இவர் திரிபின்றி வழங்கப்பட்டுள்ளார். ‘நற்றத்தனார்’ நத்தத்தனார் ஆனமையால் அவரியற்றிய ‘நற்றத்தம்’ ‘நத்தத்தம்’ எனப்பட்டிருத்தல் அறியக் கூடியதே.இ. வ-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/238&oldid=1472859" இலிருந்து மீள்விக்கப்பட்டது