பக்கம்:இலக்கண வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

“பாவென மொழியினும் தூக்கினது பெயரே"

என்பவை நத்தத்தர் தாம் கூற எடுத்துக் கொண்ட நூற்பொருள் விளக்கம் போல நூலின் தொடக்கத்தில் இந்நூற்பாக்களை அமைக்கிறார் எனக் கொள்ளலாம்; யாப்பருங்கல விருத்தியும் முதல் நூற்பாவிலேயே இவற்றை மேற்கோள் கொள்கிறது.

உரைப்பா

அடிவரையின்றியும் நடப்பவை இவை என்பதை,

“உரையும் நூலும் அடியின்றி நடப்பினும்
வரைவில என்ப வயங்கி யோரே”

“வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்(கு)
ஆமுரை மூன்றும் அன்ன என்ப”
(யா. வி. 95)

என்கிறார். இவை “அடிவரை இல்லன ஆறெனமொழிப (செய். 162). அவைதாம், நூலினான உரையினான, நொடியொடு புணர்ந்த பிசியினான, ஏது நுதலிய முதுமொழியான, மறைமொழி கிளந்த மந்திரதான, கூற்றிடை வைத்த குறிப்பினான” (163) என்று தொல்காப்பியர் கூறியன சுருங்கி வந்த நிலையைக் காட்டுவனவாம்.

நூற்பா

தனி நிலை அளபெடையும் இறுதி நிலை அளபெடையும் நேர்நேர், நிரைநேர் என அலகு கொள்வதை,

“தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே
இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே”

என்கிறார் (யா.வி.4).

நத்தத்தர் வெண்பா யாப்பிலும் நூல் செய்தார் என்பதை, “பொது வகையாற் சொற்றனவும்” என்னும் நூற்பா காட்டுகின்றது (யா. வி. 30).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/240&oldid=1473163" இலிருந்து மீள்விக்கப்பட்டது