பக்கம்:இலக்கண வரலாறு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


அந்தாதி

அந்தாதி வரும் வகையை,


“அடியும் சீரும் அசையும் எழுத்தும்
முடிவு முதலாச் செய்யுள் மொழியினஃ
தந்தாதித் தொடையென் றறையல் வேண்டும்”

என்கிறார் (யா. வி. 52). அந்தாதி பதிற்றுப் பத்திலே இடம் பெற்றிருப்பினும் அதன் இலக்கணம் கூறுமுறை பிற்பட்டதே என்பது அறியத் தக்கது. தொல்காப்பியர் அந்தாதித் தொடை கூறினார் அல்லர் என்பது கருதுக.

ஊ. பல்காயம்

பல்காயனார் இயற்றிய நூல் பல்காயம். நூற் பெயரையும் ஆசிரியர் பெயரையும் யாப்பருங்கல விருத்தி உரைக்கிறது. தொல்காப்பியர் வெளிப்பட விரித்துரைத்த செய்திகளைப் பல்காயனார் ‘பகுத்துப் பன்னினார்’ என ஒரு வெண்பா உரைக்கின்றது (யா. வி, 1). காக்கை பாடினியார், சிறுகாக்கைபாடினியார், அவிநயனார் ஆகியோர்க்குப் பல்காயனார் காலத்தால் முற்பட்டவராக இருக்கக் கூடும் என்பது யாப்பருங்கல விருத்தியில் மேற்கோள் காட்டும் வைப்புமுறைப் பெரும்பான்மையால் விளங்குகின்றது. தொல்காப்பியர், நற்றத்தர், பல்காயனார், காக்கைபாடினியார் என்னும் வைப்பு முறையைப் பல இடங்களில் கொள்கிறார். அன்றியும்: நூற்சான்றும் அதற்கு ஏற்பக் கிட்டுகின்றது எனலாம்.

பழைமை

தொல்காப்பியர்க்குப் பின்னை ஆசிரியர்கள் பெரிதும் நேர்பு, நிரைபு என்னும் அசைகளைக் கொண்டாரல்லர். ஆனால், “நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நாலசைப் பொதுச் சீரும் வேண்டினார் பல்காயனார் முதலிய ஒரு. சாராசிரியர்” என்கிறது (யா. வி. 10).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/241&oldid=1473167" இலிருந்து மீள்விக்கப்பட்டது