பக்கம்:இலக்கண வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201

புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர் (300, 341, 349), திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளின் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர் (312) என்றெல்லாம் பாராட்டுகிறார். இவ்வாறு பிறர் எவரையும் பாராட்டினார் அல்லர். ஆதலால் மயேச்சுரர்க்கும் யாப்பருங்கல விருத்தியுடையார்க்கும் தனிப்பேருறவு ஒன்று இருந்திருக்க வேண்டும். அவ்வுறவு ஆசிரியர் மாணவர் உறவாக இருக்கலாம். சமய வழிப்பட்ட உறவாக இருக்கலாம் எனின் ‘இறையனார்’ பெயர் வருமிடத்தும் வாளா கூறிச் செல்லார். ‘காரைக்காற் பேயார்’ என்ற அளவில் அமையார்.

இருவகை மொழிவழி

யாப்பருங்கல விருத்தியுடையார் தமிழாசிரியர்களை இருவழிப்படக் காண்கிறார். அவர் தமிழ் வழித் தமிழாசிரியர், வடநூல் வழித் தமிழாசிரியர் என்பார். அவருள் மயேச்சுரர் வடநூல் வழித் தமிழாசிரியர் என்பது அறியக் கிடக்கிறது. “ஒருசார் வடநூல் வழித் தமிழாசிரியர், நேர் நிரை நேர்பு நிரைபு அசைகள் ர, ட, ரு, டு வடிவாக இடுவாரும் உளர்” என்கிறார் (5). அவ்வடநூல் வழித் தமிழாசிரியர் மயேச்சுரர் என்னும் பேராசிரியர் என அறிய வருதலாலும், யாப்பருங்கல. விருத்தியுடையார் வடமொழிப் புலமையிலும் சிறத்திருத்தவர் என்பது அறியக் கிடத்தலாலும் அவர்தம் வடமொழிப் பேராசிரியர் இம்மயேச்சுரர் ஆக இருக்கக் கூடும். மயேச்சுரர் சிவநெறிச் சிந்தையராகவும் திகழ்ந்தமை இவ்வாறெல்லாம் அடைநயம் தொடை பெறப் பாராட்டப்படும் சீர்மைக்கு இடமாகி இருக்கலாம்.

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவின் இலக்கணத்தைப் பிறரிலும் இவர் மிக விரிவாகக் கூறுகின்றார். இவர் வழியிலே எடுத்துக்காட்டுக் காட்டுகிறார் யா. வி, உரையாசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/246&oldid=1473224" இலிருந்து மீள்விக்கப்பட்டது