பக்கம்:இலக்கண வரலாறு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219

 அமிதசாகரர் கி. பி. பத்தாம் நூற்றாண்டினர் என்பது உறுதியாம்.

அமிதசாகரரின் ஆசிரியர் குணசாகரர். அவரை, “தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடற் பெயரோன்” என்று பாயிரம் கூறுகின்றது.

முதற் பராந்தகன் (கி. பி. 907 - 958), உத்தம சோழன் (கி. பி. 970 --985) ஆகிய வேந்தர்களின் கல்வெட்டுகள் கழுகு மலையில் உள்ளன. அவற்றில் குணசாகரர் என்னும் சமண ஆசாரியர் தம் கொள்கைகளைப் பரப்புதற்காக நிலக்கொடை புரிந்த செய்தியுள்ளது. அவர் மாணவருள் ஒருவராகிய அமிதசாகரர் ஆங்கிருந்து சயங்கொண்ட சோழ மண்டலத்திற்கு வந்ததால் நீடூர்க் கல்வெட்டு, “அமிதசாகர முனியைச் சயங்கொண்ட சோழமண்டலத்துத் தண் சிறுகுன்ற நாட்டகத்து இருத்தி” என்று கூறுவதாயிற்று. மற்றொரு குறிப்பும் காரிகையால் அறியப்படுகின்றது. “தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்ப” எனப் பாண்டியன் அவை கேட்டதைச் சுட்டுகிறார் என்பது (சாசனத் தமிழ்க் கவி சரிதம் பக். 44). இனி இக்குணசாகரர் காரிகை உரையாசிரியராம் குணசாகரர் எனக் கொள்வாரும் உளர். அவரல்லர் என்பதைக் காரிகைப் பகுதியில் கண்டு கொள்க.

சமயம்

“வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய
அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே”

என்னும் சிறப்புப் பாயிரத்தால் அமித சாகரர் சமணர் என்பது வெளிப்பட விளங்கும். இன்னும் சமணருள்ளும் அருங்கலான் வயம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/264&oldid=1473336" இலிருந்து மீள்விக்கப்பட்டது