பக்கம்:இலக்கண வரலாறு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235


ஒரு சொற் பல பொருள்

ஒரு பொருள் பல சொற்களைக் கூறுதலில் குணசாகரர் பேரார்வம் காட்டுகிறார். இலக்கண உரையாசிரியர்கள் பலரும் அம்முறை மேற்கொளல் வழக்கே.

“ஆவி எனினும் உயிரெனினும் ஒக்கும்”

“அஃகேனம் எனினும் ஆய்தம் எனினும் தனிநிலை
எனினும் புள்ளி எனினும் ஒற்றெனினும் ஒக்கும்”

"மெய்யெனினும் உடம்பெனினும் உறுப்பெனினும் புள்ளி
எனினும் ஒற்றெனினும் ஒக்கும்"

இவ்வாறு கூறும் இவர் "என்னை?" என்று வினாவி,

"அஃகேனம் ஆய்தம் தனிநிலை புள்ளி
ஒற்றிப் பால வைந்தும் இதற்கே"

என்பது போல நூற்பாக்களையும் மேற்கோள் காட்டுகிறார். இவ்வாறு ஒரு பொருட் பன்மொழி காட்டுதல் கொண்டு அக்காலச் சொல் வழக்குகளை அறிவதுடன் பின் வழக்குகளை முடிவு செய்யவும் உதவுதல் கண்கூடு.

கலித்துறை

யாப்பருங்கலக் காரிகை என நூற் பெயர் இருப்பினும் காரிகையாகிய கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் நூலில் இடம் பெறவில்லை. ஆனால் உரையாசிரிய முதற் காரிகை உரையிலேயே,

“அடியடி நோறும் ஐஞ்சீர் ஆகி
முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக்
கடையொரு சீரும் விளங்காய் ஆகி
நேர்பதி னாறே நிரைபதி னேழென்
றோதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே”

என ஒரு நூற்பாவைக் காட்டி விளக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/280&oldid=1473812" இலிருந்து மீள்விக்கப்பட்டது