பக்கம்:இலக்கண வரலாறு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

எடுத்துக் கொண்டதை இனிதின் அதே பொழுதில் தெளிவாக விளக்க விரும்பும் உரையாசிரியர் குணசாகரர் எடுத்துக்காட்டுகளை ஏற்ற வகையால் பயன்படுத்துகிறார்:

விளக்கம்

“இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை” என்றமைகிறார் நூலாசிரியர். அதை விளக்கும் உரையாசிரியர் “இரண்டாம் எழுத்து ஒன்றின் எதுகை என்னாது வழுவா எழுத்து என்று சிறப்பித்த அதனால் இரண்டாம் எழுத்து ஒன்றி வரினும் முதலெழுத்தெல்லாம் தம்முள் ஒத்து அளவினவாய் வந்து, கட்டென்பதற்குப் பட்டென்பது அல்லாது பாட்டென்பது எதுகை யாகாது, காட்டென்பதற்குப் பாட்டென்பது அல்லாது பட்டென்பது எதுகையாகாது எனக்கொள்க” என்று விளக்குகிறார்.

யாப்பருங்கல விருத்தியுள் கண்டு கொள்க என்று கூறும் இவர், காக்கை பாடினியம், மயேச்சுரம், அவிநயம், பல்காயம், நத்தத்தம், தொல்காப்பியம் முதலான பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். நூலாசிரியர் பெயரையோ நூற் பெயரையோ சுட்டும் வழக்குடைய இவர் ‘என்றார் பிறரும்’, ‘என்றார் ஆகலின்’ என்றும் பல இடங்களில் சொல்லிச் செல்கிறார்.

குணசாகரர் சமண சமயம் சார்ந்தவர் என்பது தெளிவாக விளங்கினும் அவர் எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள் எனத் “தாமரை புரையும் காமர் சேவடி” என்னும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை நூல் நிறைவில் வைத்தமை அவர் சால்பின் நிறைவுச் சான்றாகத் திகழ்கின்றது.

உரைமுறை

இக்காரிகை இன்ன நுதலிற்று என்று கூறும் போதே நூற்பாவின் பொருள் விளங்குமாறு செய்யும் வழக்கை இவர் மேற்கொள்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/281&oldid=1473813" இலிருந்து மீள்விக்கப்பட்டது