பக்கம்:இலக்கண வரலாறு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

அமைந்துள்ளது. பாயிரம் மூன்று பாடல்களையும் நூல் 18 பாடல்களையும் கொண்டுள்ளன. இறுதியில் ‘அந்தச் சிறப்பு’ என்றொரு கட்டளைக் கலித்துறைப்பா உள்ளது. அதில் இந்நூல் 'வீரசோழியக் காரிகை' எனவும் வழங்கப்படும் என்பதும், இதற்குப் பொழிப்புரை வரைந்தவர் ‘பெருந்தேவனார்’ என்பதும் அறிய வருகின்றன.


“தடமார் தருபொழில் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த
படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின்
திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்
கடனாக வேநவின் றான் தமிழ் காதலில் கற்பவர்க்கே”

என்பது அது. கட்டளைக் கலித்துறைக்குக் ‘காரிகை’ என்றொரு பெயரிருப்பதும் இந்நூலில் பல பாடல்களில் மகடூஉ முன்னிலை அமைந்திருப்பதும் ‘காரிகை’ என்பதற்குக் காரணங்களும் ஆகலாம்.

பெருந்தேவனார்

சங்க நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடிய ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’, ‘பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனார்’, ‘கவிசாகரப் பெருந்தேவனார்' எனப் பெருந்தேவனார் பெயரொடும் சிலர் அறியப் பெறுகின்றனர். அவருள், வீரசோழிய உரைகாரராகிய இப்பெருந்தேவனார் வேறொருவராவர். இவ் உரையாசிரியர், நூலாசிரியர் காலத்தவர் என்றும், அவர் மாணவர் என்றும் கூறுவாருளர். இவர் காலத்தை விக்கிரம சோழன் காலமாகிய பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பர். (த. இ.வ. 11 -ஆம் நூற்றாண்டு) அவனைப் பற்றிய பாடல்களும் உரையில் உள்ளமை சான்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/287&oldid=1473818" இலிருந்து மீள்விக்கப்பட்டது