பக்கம்:இலக்கண வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxviii


ளதிகாரத்தில் உள்ள அகத்திணையும் அகப்பொருள் இலக்கணம் கூறும் மற்ற இயல்களும் தனி நூல்களாயின. புறத்திணை தனி இலக்கணமாக வளர்ச்சி பெற்றது. செய்யுளியல், யாப்பிலக்கண நூல்களில் அடங்கியது. உவமவியல், அணி நூல்கள் ஆயிற்று.

சொல்லதிகாரத்தில் உள்ள உரியியலும் இடையியலும், பொருளதிகாரத்தில் உள்ள மரபியலும் சேர்ந்து இடைக்காலத்தில் நிகண்டு நூல்களாயின.

நிகண்டு நூல்கள், இலக்கண நூல்களே என்ற கருத்து நன்னூலார்க்கு உண்டு. நன்னூலார் உரிச்சொற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது பிங்கல நிகண்டை நினைவூட்டியுள்ளார். ஆனால், தமிழ் உலகம் நிகண்டு நூல்களை இலக்கண நூல்களாக இன்னும் கருதவே இல்லை! அவற்றை இலக்கண வகைகளுள் ஒன்றாகக் கருதும் கொள்கை தோன்றவே இல்லை. இலக்கண வரலாறு எழுதும் ஆசிரியர்களிடமும் இத்தகைய பார்வை ஏனோ தோன்றவில்லை. இது ஒரு பெருங்குறையாகும். இந்தக் குறை இந்த நூலிலும் உள்ளது. இதன் இரண்டாம் பதிப்பில், நிகண்டு நூல்களை இலக்கண நூல்களாகக் கொண்டு ஆயும் கட்டுரை இடம் பெற வேண்டும்!

16. மறு ஆய்வு செய்ய வேண்டிய கருத்துகள்

இந்த நூலில் மறு ஆய்வு செய்ய வேண்டிய கருத்துகள் சில உள்ளன. அவற்றைச் சுட்டிக் காட்டி நூலாசிரியர் கவனத்திற்குக் கொண்டு வருவதால் ஆய்வுலகில் உண்மை ஒளி பரவும்.

1. நற்றத்தனார்—நத்தத்தனார்

“தத்தனார் என்னும் பெயருடையார், 'நல்' என்னும் சிறப்புப் பெயர்பெற்று நற்றத்தனார் என வழங்கப்பட்டுப் பின்னர் ‘நத்தத்தனார்’ என்று ஆகி இருக்கக்கூடும்”(பக்-193) என்கிறார் ஆசிரியர். இவரது கருத்திற்கு மாறான செய்திகளை நச்சினார்க்கினியரும், டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரும் கூறி உள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/29&oldid=1480826" இலிருந்து மீள்விக்கப்பட்டது