பக்கம்:இலக்கண வரலாறு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

“ இடையே வடவெழுத்து எய்தில் விரவியல் ஈண்டெதுகை
நடையேதும் இல்லா மணிப்பிர வாளம்நல் தெய்வச்சொல்லின்
இடையே முடியும் பதமுடைத்தாம் ”

என்கிறார் வடவெழுத்தைத் தவிர்ந்து என்பதன் விளக்கமாக உரையாசிரியர்,

“மணிப்பிரவாளத்தினுக்கும் விரவியல் செய்யுட்களுக்கும் வட்வெழுத்து வருக என்று சிறப்பிலக்கணம் உண்மையால், அவற்றில் வடவெழுத்து வருவது குற்றமன்றென்க” என்று வரைகின்றார். தமிழை, “அவலோகிதன் மெய்த்தமிழ்” என்றே துணிந்துரைக்கின்றார் (83).

பெருந்தேவனார் உரை

சொற்பொருளாக உரை செல்கின்றது. வேண்டுமிடங்களிலேயே விளக்கமும் எடுத்துக்காட்டும் காட்டுகின்றார். பல இடங்களில் உரையளவிலேயே அமைகின்றார். எழுத்ததிகாரம் சந்திப்படலம் முற்றவும் விளக்கவுரை எதுவும் இல்லை. யாப்பு அலங்காரப் படலங்களில் சில இடங்களில் விரிவுரையாக எழுதுகின்றார்.

உரை நிலை

எடுத்துக்காட்டு, உதாரணம் என்று பிறர் கூறுவதை இவர் ‘வரலாறு’ என்கிறார்.

“இந்திரன் தாமரையைக் கரத்தாற் கொய்திறைவனுக்குத்
தந்திருங் குற்றத்தின் நீங்கிவிண் மேல் இருந்தான்எனலும்
வந்தன காரக மெல்லாம் வருத்த வழிமுறையே

என்றார் பிறரும்” எனக் காரகங்கள் ஆறும் (வேற்றுமை உருபுகள்) வருமாற்றை எடுத்துக் காட்டுகிறார். தெய்வச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/293&oldid=1473885" இலிருந்து மீள்விக்கப்பட்டது