பக்கம்:இலக்கண வரலாறு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

அன்றியும் அவை செய்த காலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி இருக்கும் என்றாலும் அமையுமெனக் கொள்க” என்பது அது (144).

சில வழக்குகள்

சில தேயத்து வழக்குகளைக் குறிப்பிட்டு, அவை அறிவிலார் வழங்கும் பிழை வழக்கு எனக் கடிகின்றார்; “நானி கோளி மூளை உளக்கு வாளை வளி எனவும், விழக்கு பழிங்கு தழிகை கிழமை எனவும் — பதினாறாம் உடலும் (ள), பதினைந்தாம் உடலும் (ழ) தம்முட்டேற்றக் கருநிலஞ் சுற்றின தேசத்துச் சிலர் வழங்குவர்.

“வெச்சிலை, முச்சம், கச்சை எனவும் உற்றியம் போது எனவும் மற்றியம், பிற்றை வாங்கி விற்றான் எனவும் பதினேழாம் உடலும் (ற), மூன்றாம் உடலும் (ச) தம்முட்டேற்றக் காவிரி பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர்.

“நெல்லுக்கா நின்றது, வீட்டுக்கா நின்றது” என்று பாலாறு பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர்.

“மற்றும் இவனைப் பாக்க, இங்காக்க, அங்காக்க எனவும், இப்படிக் கொற்ற, அப்படிக் கொற்ற எனவும் சேத்து நிலம், ஆத்துக்கால் எனவும் வாயைப்பயம், கோயி முட்டை எனவும் உசிர், மசிர் எனவும் பிறவாற்றாலும் அறிவில்லாதார் தமிழைப் பிழைக்க வழங்குவர். இவையெல்லாம் உலகத்தார்க்கு ஒவ்வா என்று களைக. ‘உலகம் என்ப துயர்ந்தோர் மாட்டே’ என்றறிக” என்கிறார். இப்பகுதியால் இவர் பல தேய மக்கள் வழங்கும் வழக்குகளை அறிந்தவர் என்பது விளங்கும். இத்தகு கருத்துடையார் தமிழ் மரபைப் போற்றிக் கொள்ளாமை சிந்திக்க வைக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/295&oldid=1473889" இலிருந்து மீள்விக்கப்பட்டது