பக்கம்:இலக்கண வரலாறு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. இந்திர காளியம்


இந்திர காளியார் என்பவரால் இயற்றப்பட்ட பாட்டியல் நூல் இந்திர காளியம் என்பது. இந்நூல் முற்றாகக் கிடைத்திலது. பன்னிரு பாட்டியல் வெண்பாப் பாட்டியல் நவநீதப் பாட்டியல் என்பவற்றின் வழியே 40 நூற்பாக்கள் கிடைத்துள்ளன. இவற்றைத் தொகுத்து மூலமும் பொழிப்புரையுமாக அறிஞர் க.ப. அறவாணர் 1974-இல் பதிப்பித்துள்ளார். சென்னை சைன இளைஞர் மன்றம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

காலம்

வெண்பாப் பாட்டியலின் பாயிரம், “இஃது எந்நூல் வழித்தோ எனின் இந்திர காளி என்னும் பாட்டியன் மரபின் வழித்து” என்கிறது. அன்றியும் ஒன்பதாம் நூற்பா விளக்கத்தில் இந்திர காளி நூற்பாக்கள் ஐந்தனையும், பதினெட்டாம் நூற்பா விளக்கத்தில் நூற்பா ஒன்றனையும் காட்டியுள்ளது. இவற்றால் வெண்பாப் பாட்டியலுக்கு முதனூலான இந்திர காளியம், அதற்குக் காலத்தால் முற்பட்டதென்பது வெளிப்படை. குணவீர பண்டிதர் காலத்திய குலோத்துங்க சோழனுக்கு முற்பட்டவர் எனின் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்றும், இராசராசனுக்கு முற்பட்டவர் எனின் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்றோ கொள்ள வேண்டும்.

அடியார்க்கு நல்லார் உரையில் குறிக்கப்படும் இந்திர காளியம் இசை நூல், அதன் ஆசிரியர் யாமளேந்திரர் எனப்படுதலால் அந்நூல் வேறொன்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/299&oldid=1473901" இலிருந்து மீள்விக்கப்பட்டது