265
பண்டிதர் என்னும் முனிவர் எனப்பட்டவரது தலைமைக் கண் அமைந்த கழகம் ஆகலாம். கடவுள் என்பது முனிவரைக் குறித்தல் பழவழக்கு.
குணவீர பண்டிதர் சிறப்பு வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்தால் இனிது விளக்கப்படுகிறது:
“பண்பார் கவிஞர் வியந்தேத்தப் பாட்டியலாம்
வெண்பாவந் தாதி விளம்பினான்-நண்பாரும்
கோடாத கீர்த்திக் குணவீர பண்டிதனாம்
பீடார் களந்தைப் பிரான்”
என்பது அது.
நூல்
வெண்பாப் பாட்டியல் என்னும் வச்சணந்தி மாலை அந்தாதி முறையில் அமைந்தது. அதனாலேயே ‘மாலை’ என்னும் பெயர் பெற்றது. இந்நூல் முதன் மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என்னும் மூன்றியல்களைக் கொண்டது. மூன்றியல்களிலும் முறையே 22, 48, 30 ஆக 100 வெண்பாக்கள் உள்ளன. பாயிரம் (2), வச்சணந்தியார் பெருமை (1), அவையடக்கம் (1) என்பவை 4 வெண்பாக்கள்.
முதன் மொழியியல் மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உணா, வருணம், நாள், கதி, கணம் எனப்படும் பத்துப் பொருத்தங்களைக் கூறுகின்றது.
செய்யுளியல் நால்வகைக் கவிகள், பிள்ளைக்கவி முதல் அகலக்கவி ஈறாகிய நூல்வகைகள், கமகன், வாதி, வாக்கி, புன்கவிஞர் ஆயோர் தன்மை ஆகியவற்றைக் கூறுகின்றது.
பொதுவியல் நாற்பாக்களின் சாதி, இராசி, தேவதை, பாடும்விதம், உறுப்புச் செய்யுள், அகலக்கலி புனைவோர், நல்லவை, நிறையவை, தீயவை, அந்தணர் முதலியோர் இயல்பு, பாயிரத்திலக்கணம், அகலக் கவி கேட்பிக்கும் முழுத்தம் ஆகியவற்றைக் கூறுகின்றது.