பக்கம்:இலக்கண வரலாறு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

270

“பூவிரி தண்பொழில் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினில் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே”

என்பது அது. “ஆடக மன்றத்து நாடகம் நவிற்றும், வடநூல் உணர்ந்த தமிழ் நூற் புலவன்” என்றும் அப்பாயிரம் கூறும். தொல்காப்பிய வழியும் பல்காப்பிய நெறியும் அறிந்து வடநூல் வழிமுறை வழாது நூல் செய்த வகையையும் பாயிரம் குறிப்பிடுகின்றது. ஆனால் தண்டியின் காவிய தர்சத்தின் வழிநூல் என்னும் குறிப்பு அப்பாயிரத்தில் இல்லை.

காலம்

தண்டியாசிரியர் காலத்தை வேறொரு வகையால் உறுதி செய்ய வாய்ப்புளது. அநபாய சோழன் எனப்படும் இரண்டாம் குலோத்துங்கனை எடுத்துக்காட்டுப் பாடல்கள் சில சிறப்பிக்கின்றன. அவன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தரை ஒரு பாடல் ஊர்ப் பெயருடன் குறிக்கின்றது. அப்பாடல்,

“சென்று செவியளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுளே
நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று
மலரிவரும் கூந்தலார் மாதர்நோக் கொன்று
மலரிவரும் கூத்தன்தன் வாக்கு”

என்பது. மலரி என்பது ஒட்டக்கூத்தர் ஊர். அவர்தம் மாணவர் இவர் என்றும், அவர் ஊரினரே இவர் என்றும் கூறுவர் (பிற்காலச் சோழர் வரலாறு 11: பக்கம் 100). ஆதலால் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலமாகிய 12-ஆம் நூற்றாண்டே இவர் காலமுமாம்.

இனி இப்பாடலும் பிறவும் நூலின் எடுத்துக்காட்டாக வருதலால் நூலாசிரியர் இயற்றியதாகுமோ, உரையாசிரியர் இயற்றியதாகுமோ, அது கொண்டன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/315&oldid=1474239" இலிருந்து மீள்விக்கப்பட்டது