பக்கம்:இலக்கண வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இலக்கண வரலாறு

முகப்பு

“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்பது நூல் வழக்கும் உலக வழக்குமாம். ஆனால், அவ்வாற்றுக்குக் கரையில்லாவிடின், ஊரே பாழ் என்பதை உலகம் அறியும்.

ஆற்றங்கரையின் மரமும், வெள்ளப் பெருக்கால் வேரொடு சாய்ந்து வெள்ளத்தொடு போதல் கண்கூடு. கரை மரத்திற்கே அந்நிலையாயின், கரை இலா ஆற்றின் மரத்திற்கு எந்நிலையாகும்?

ஒரு நாள் வெள்ளமன்று; ஒரிடத்து வெள்ளமன்று, பல்கால் பற்பலவிடத்து வெள்ளம் உடையது மொழியென்னும் ஆறு! பல்லாயிரம் ஆண்டாகத் தொடரும் கால வெள்ளம்! பொது மக்கள், அரசு, சமயம், கலை, பழக்க வழக்கம், நாடு, இனம், வட்டாரம், போக்கு வரவு இன்னனவெல்லாம் ஓயாமல் ஒழியாமல் தாக்கும் புதுப்புது வெள்ளங்கள்! இவற்றுக்கு எல்லாம் காப்பாகி—வளர்ச்சியாகி—வாழ்வாகித் திகழ வாய்த்த மொழியாற்றின் கரை — திண்கரை — காலந்தொறும் கண்காணிக்கப் பட்டும் — வலுப்படுத்தப்பட்டும் — சீர்திருத்தப்பட்டும் வரவேண்டிய நலக்கரை — இலக்கணமே!

“அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளா
கோடின்றி நீர் நிறைந் தற்று”

என்பது வள்ளுவம். கோடு (கரை) இன்றி நீர் நிறைந்தால், நன்மை செய்யும் நீரே தீமை செய்தற் சான்று. மொழிக்குக் கரையின்மை, நன்மைக்கு அமைந்த மொழி தீமைக்கு இடமாகிப் போதலாய் முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/33&oldid=1480830" இலிருந்து மீள்விக்கப்பட்டது