பக்கம்:இலக்கண வரலாறு.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

“மலர்தலை உலகில் பலநூல் ஆய்ந்து
செய்வதும் தவிர்வதும் பெறுவதும் உறுவதும்
உய்வதும் அறியேன்”

என்று கூறும் இவர் மொழி இவர்தம் அடக்கத்திற்குச் சான்றாம். இவர்தம் குருவரன்பு,

“நன்னெறி பிறழா நற்றவத் தோர்பெறும்
தன்னடித் தாமரை தந்தெனை யாண்ட
கருணையங் கடலைஎன் கண்ணைவிட் டகலாச்
சுவாமி நாத குரவனை அனுதினம்
மனமொழி மெய்களில் தொழுது”

என்பதால் விளங்கும்.

உரை

இவருரையை மதிப்பிடும் உ. வே. சா. “இவர் மயிலை நாதருரையைப் பின்பற்றியவராக இருப்பினும் அவராற் புலப்படுத்தப்படாத அரிய விஷயங்கன் பல இவருரையிற் காணப்படுகின்றன. பல இடங்களில் தக்க காரணங்கள் கூறி அவர் உரையை இவர் மறுக்கின்றார். பதசாரம் எழுதிச் செல்லுதலிலும் பொருளை நுட்பமாக அறித்து தக்க ஆதாரங் காட்டி விளக்குதலிலும் உவமை காட்டலிலும் பிறவற்றிலும் இவருரை அவருரையைக் காட்டிலும் மேற்பட்டதென்று சொல்லலாம். காரணம், அவருடைய காலத்திற்குப் பின்பு பற்பல ஆசிரியர்கள் தோன்றி இயற்றித் தந்த நூல்கள் உரைகள் ஆகியவற்றின் பேருதவிதான் என்று சொல்ல வேண்டும்” என்கிறார்.

தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகியவற்றை மிகச் சிறப்பித்துக் கூறுபவர் சாமிதாத தேசிகர். அவர் மாணவராகிய இவர் இம்மூன்று நூல்களையும் அழுந்தக் கற்றவர் என்பது இவர் காட்டும் எடுத்துக்காட்டுகளாலும் நயங்களாலும் விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/341&oldid=1474278" இலிருந்து மீள்விக்கப்பட்டது