பக்கம்:இலக்கண வரலாறு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. களவியற் காரிகை


நூல் நிலை

முதலும் இடையும் முடிவும் இல்லாத நூல்; நூலாசிரியர் பெயரோ நூற்பெயரோ உரையாசிரியர் பெயரோ அறியவராத நூல்; நூற்பெயர் தெரியாத நூல்களுக்கு நூற்பெயர் தரும் நூல்; ஆசிரியர் பெயர் தெரியாத நூல்களுக்கு ஆசிரியர் பெயர் தரும் நூல். அதற்குத் தகவாக இட்டு வைத்த பெயர் களவியற் காரிகை.

களவியல்

களவொழுக்கம் பற்றிக் கூறும் நூல் களவியல் ஆகும். இறையனார் அகப்பொருளுக்குக் களவியல் என்றும், இறையனார் களவியல் என்றும் பெயர்கள் உண்மை அறிந்ததே. ஒரு நூலில் களவியல் இலக்கணம் கூறும் பகுதியும் களவியல் எனப்படும். இதற்குத் தொல்காப்பியக் களவியலும், நம்பியகப்பொருள் களவியலும் சான்று. களவொழுக்கத்திற்கு இலக்கியமாக அமைந்த ஒரு பகுதியும் களவியலாம். திருக்குறட் களவியல் இதற்குக் காட்டு.

காரிகை

களவியல் என்னும் பெயரே சாலுமாகக் காரிகை என்றும் ஒட்டு வேண்டுவதேன்? களவியல் எனின் இறையனார் களவியலையே குறிக்குமாகலின் களவியல் காரிகை என வெளிப்பட விளங்கப் பெயர் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/368&oldid=1465602" இலிருந்து மீள்விக்கப்பட்டது