பக்கம்:இலக்கண வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxvi

பெருக்கமும் கொண்டு தமிழ் இலக்கணம் நான்காக நடத்தலாயிற்று. இதன் விரியே யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பன.

இனி, உவமை தொல்காப்பியத்தில் ஓரியலாக இருந்தது. அதன் வகைகள் நூல் வழியாகவும், உரை வழியாகவும் பலவாக விரிந்தன. மெய்ப்பாட்டியல் கூறுகள் சிலவும், யாப்பியல் கூறுகள் சிலவும், சங்க நூல், திருக்குறள் முதலாகிய இலக்கியக் கொடைகள் சிலவுமாக ‘அணியியல்’ என ஓரியல் தனித்துக் கிளர ஏவின. அக்காலத்தை அடுத்தே வடமொழி அணி நற்செய்திகளும் தமிழ்ப் புலவர்களைக் கவர்ந்தன. அவ்வகையில் தண்டியலங்காரம் தனித்து அணியிலக்கணமெனக் கிளர்ந்தது. அதன் வழியிலே சந்திராலோகம், குவலயானந்தம் என்பனவும் தோன்றின. மாறனலங்காரம் என்பதும் பிறவும் வளர்ந்தன.

இயல்பாக இருந்த பொருள், அகம் புறம் எனத் தொல்காப்பியப் பகுப்புடையதாக விளங்கியது. அப்பகுப்பிலும் அகப்பகுப்பு விரிவுடையது. அகத்திணையியல், புறத்திணையியல் என்பவை தனித்தனி பகுக்கப்படினும், முன்னதொடு களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல், செய்யுளியல் என்பனவும் தொடர்புடையனவாக நின்றன. அப்பகுப்பே, அகப்பொருள் நூல்கள் தனிவடிவங் கொள்வதற்கு மூலமும் முடிபுமாக நின்றன. அகத்திணை இயல் அப்பெயராலேயும், களவியல் கற்பியல் என்பனவும் அவ்வப்பெயர்களாலேயும் இம்மூவியல்களும் ஒரு நூலாகவும் அமைந்தன. அவ்வகையில் இறையனார் களவியல் ஓராற்றாற் செல்லினும், முற்றாக நம்பியகப் பொருள் செல்வதாயிற்று. திருக்குறள் போலும் இலக்கியமும் களவியல் கற்பியல் பகுப்பைப் போற்றின. அகத்திணைப் பொருள் சார்ந்த ஐந்திணை நூல்களும், ஐந்திணைத் தொகை நூல்களும் எடுத்துக்காட்டாகப் பெருகி விளங்கின. இவற்றால் அகப்பொருள் தனிப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/37&oldid=1471419" இலிருந்து மீள்விக்கப்பட்டது