பக்கம்:இலக்கண வரலாறு.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

327

கிறது. ஆகலின், அதனை முதனூல் எனக் கொண்டார் இந்நூலாசிரியர் எனக் கொள்ள நேர்கின்றது. எனினும், நம்பியகப் பொருள் போலத் துறை வகையால் கோவைப்படுத்தியே நூலைக் கொண்டு செல்கின்றார். ஒருகால் நூலாசிரியரே உரையாசிரியராகவும் இருந்திருக்கக் கூடும் என நம்புதற்குத் தடையொன்றும் இல்லை.
கையறு கிளவி என்பது தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல் என இவை முதலாகிய காப்பு மிகுதி சொல்லி வரவு விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு: என்று கூறித் திருக்கோவையார், பாண்டிக்கோவை, அகநானூறு, பொருளியல் என்பவற்றில் இருந்து ஒன்பது பாடல்களை மேற்கோள் காட்டுகிறார். இவர் எடுத்துக்காட்டும் நெடுந்தொகைப் பாடலில் எண்வகைத் தடைகள் குறிக்கப்படுகின்றன (அகம். 121). அதனால் இவையெல்லாம் வந்த செய்யுள் என்கிறார். கிளவித் தெளிவில் இருந்து இவர் காட்டும் பாடல் ஐந்து தடைகளைக் காட்டுகின்றது:

“ஊர்துயிலின் நாய்துயிலா ஒண்டொடி யூர்காக்கும்
பேர்துயிலு மாறொருகால் பெற்றாலும் — நேர்துயிலாள்
அன்னை நெடுநிலா அல்லும் பகலாகும்
என்னை வருவதுநீ இங்கு”


என்பது அது.

எடுத்துக் காட்டால் சிறப்புறும் நூலுள் சிறந்த இடத்தைப் பெறுவது களவியற் காரிகை எனின் மிகத் தகும்.

“எங்களூர் இவ்வூர் இதுவொழிந்தால் வில்வேடர்
தங்களூர் வேறில்லை தாமுமூர் - திங்களூர்
நானும் ஒருதுணையா நாளைப்போ தும்இந்த
மானும் நடைமெலிந்தாள் வந்து”


என்னும் விருந்து விலக்குத் துறை சார்ந்த இக்கிளவித் தெளிவு எத்தகு எளிய இனிய பண்பியல் பாரிக்கும்பா! இப்படி எத்தனை பா இந்நூலில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/372&oldid=1474310" இலிருந்து மீள்விக்கப்பட்டது