பக்கம்:இலக்கண வரலாறு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

329

பாட்டியல் வழி
வெண்பாப் பாட்டியல் இந்திரகாளி செய்த பாட்டியல் வழி வந்தது என்பதை அறிவோம். அதன் காலம் 12ஆம் நூற்றாண்டு. அவர் வழி ஒன்றும் அகத்தியர் வழி ஒன்றுமாக அல்லது சமண வழி ஒன்றும், வைதிக வழி ஒன்றுமாக இருவழிப் பாட்டியல் நூல்கள் கிளர்ந்தன என்பர். இது பொதுமையது போலும்! பாட்டியல் புலவர் பெயர்களுள் பலவும் பழம்புலவர்களின் பெயர்கள். திருவள்ளுவமாலைத் தொகுப்புப் போலப் பழம்புலவர்களின் பெயரால் பாட்டியல்கள் இயற்றி உலவ விட்டவற்றைத் தொகுத்த தொகுப்பு என்றே இதனைக் கொள்ளலாம். எவ்வாறாயினும் இத்தொகுப்பின் காலம் 14 ஆம் நூற்றாண்டாகலாம் என்பர்.

நூலளவு
இந்நூல் எழுத்தியல் சொல்லியல் இனவியல் என மூன்றியல்களை உடையது. இந்நூல், 360 நூற்பாக்களையுடையது. இவற்றுள் 204ஆம் நூற்பா ஒன்றுமட்டும் வெண்பா. எஞ்சியவை அனைத்தும் நூற்பா யாப்பே.

பொருள்
எழுத்தியல் எழுத்தின் பிறப்பு, வருணம், கதி, உண்டி, பால், தானம், கன்னல், புள், நாள் என்னும் ஒன்பதனை விரிப்பது.

சொல்லியல் சீர்க்கணம், மங்கலச் சொல், பெயர்ப் பொருத்தம் என்பவற்றை விளக்குவது.

இனவியல் பாப்பொருத்தம் பாவினம் என்பவற்றைக் கூறுவது. இதனுள் சாதகம் முதல் கையறுநிலை ஈறாய் அறுபத்தாறாகப் பாவினம் கூறப்பட்டுள்ளன. இதனை 96 என்றும், அதற்குமேல் என்றும் கூறுவாரும் உளர். பாட்டு, கணக்கு (மேற் கணக்கு, கீழ்க்கணக்கு) எனத் தொகை நூற்கணக்குகளும் இப்பாட்டியலில் இடம் பெற்றுள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/374&oldid=1474313" இலிருந்து மீள்விக்கப்பட்டது