பக்கம்:இலக்கண வரலாறு.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

கோவையும், திருக்குருகை மான்மியம், நம்பெருமாள் மும்மணிக் கோவை, மாறன் கிளவிமணிமாலை முதலியன.

காலம்

இவரியற்றிய திருக்குருகை மான்மியம் அரங்கேற்றமாகிய காலம், “அறந்திகழ் ஆண்டவை எழுநூற் றிருபான் மூன்றில் அணிகிளர் கார்த்திகை மாதம் எட்டில்” என்றுள்ளது. இவ்வாண்டு கொல்லம் 723. அது கி.பி.1548. ஆதலால், 440 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறியவரும்.

சிறப்பு

இவர் தம் தந்தையாரிடத்தே கல்வி கற்றார் என்றும், பலர்க்கும் பயன்படும் கல்விக் களஞ்சியம் (சுவடி நூலகம்) ஒன்று ஏற்படுத்தினார் என்றும், நாற்பத்தொன்பது என்று எண்ணப்படும் சங்கப் புலவர்களுடன் இவர் ஐம்பதாமவர் என்று எண்ணத் தக்கவர் என்றும் கூறுவர். “நாற்பத் தொன்பதை ஐம்பதென்று, சாற்றுந் திருக்குருகைப் பெருமாள் நம் சடைக்குட்டியே” என்பது இவர் பற்றியதொரு பாடலின் அடி.

நூலியல்

மாறனலங்காரம் பாயிரப் பகுதியை விரிவாகக் கொண்டது. சிறப்புப் பாயிரம் நீங்கிய 64 பாடல்களையுடையது; நூற்பா, அகவல், வெண்பா எனப் பல்வேறு பாவகையுடையது. நூல், பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என நான்கு இயல்களையுடையது. மொத்தத்தில் சிறப்புப் பாயிரம் நீங்கிய 326 நூற்பாக்களையுடையது.

பொதுப்பாயிரத்தில்,

“வெள்ளையின் அகவலின் விளம்புதல் மரபே”

என்று இவர் கூறியபடி பொதுவியலை வெண்பாவாலும், மற்றை இயல்களை நூற்பாவாலும் அமைத்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/389&oldid=1474347" இலிருந்து மீள்விக்கப்பட்டது