பக்கம்:இலக்கண வரலாறு.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழியைக் ‘கண்ணி’ எனவும் ‘அவர்’ எனவும் வகையுளி செய்து சீர் கொள்ளப்படுதலின் இது ‘மலர்’ என்னும் வாய்பாட்டான் முடிந்த ஒரு விகற்பக்குறள் வெண்பா.”

இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பது போல, இலக்கியங்காட்டி இலக்கணம் விளக்கலாக இந்நூல் முழுதுற இயலுதல் புதியதோர் நூன்முறை உத்தியாகக் கொள்ளலாம். இதற்குப் பிறநூல் எடுத்துக்காட்டுகளினும் ‘பாப்பாவினம்’ நேரிடைச் சான்றாக இருந்திருக்கக் கூடும். குருபரரின் பிறந்தகமும், (திருவைகுண்டமும்) திருக்குருகைப் பெருமாள் கவிராயர் பிறந்தகமும் (ஆழ்வார் திருநகரி) நெல்லை நாட்டில் அணித்தான ஊர்கள் என்பது அறியத்தக்கது.

எடுத்துக்காட்டு

இச்சிதம்பரச் செய்யுட் கோவைக்கெனத் தனியே எடுத்துக்காட்டுப் பாடியதன்றித் தாம் பாடிய பிற நூலின் செய்யுளையும் எடுத்துக்காட்டுதல் ‘நீரிற்குமிழி இளமை’ என்னும் நீதிநெறி விளக்கப்பாடலால் அறியலாம் (9).

“பரசிருக்கும் தமிழ்மூவர் பாட்டிருக்கும் திருமன்றில்
பரசொன்றேந்தி
அரசிருக்கும் பெருமானார்க் காட்செய்யார் என் செய்வார்
முரசிருக்கும் படைநமனார் முன்னாகு மந்நாளே” (35).

என்னும் வெண்டுறையில் தமிழ் மூவர் பாட்டின் மேல் இவர்கொண்ட பற்றுமை புலப்படும்.

“அறிவினில் அறிபவர் அறிவதை அலதொரு
குறியினில் அறிவுறு குறியினை யலை”

என்பன முதலாகவரும் அராகங்கள் நான்கும் இறைமையில் பிழிவுகள் (68)

பதிப்பு

குமரகுருபரர் வாக்கு நயத்தை விரிக்க வேண்டுவதில்லை. கற்றோர் நன்கு அறிவர். குமரகுருபரர் செய்யுள் திரட்டுத் தொகுதியொடு கூடியமைந்தது சிதம்பரச் செய்யுட்கோவை. கழக வழியாகவும் உ.வே.சா. வழியாகவும் ‘திரட்டு’ வெளிவந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/405&oldid=1474413" இலிருந்து மீள்விக்கப்பட்டது