பக்கம்:இலக்கண வரலாறு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28. பிரயோக விவேகம்


குருகூர் என்றும் குருகை என்றும் இலக்கியங்களில் சொல்லப்படும் ஊர் ஆழ்வார் திருநகரி. இவ்வூரினராகிய சுப்பிரமணிய தீட்சிதரால் இயற்றப்பட்ட நூல் பிரயோக விவேகம்.

நூலும் உரையும்

இதன் தற்சிறப்புப்பாயிரம் ‘ஏர்கொண்ட சொற் பிரயோக விவேகம்’ என்று சொல்கின்றது. ‘வடமொழிப் பிரயோக விவேகத்திலும் சொல்லிலக்கணமல்லாது எழுத்திலக்கணம் கூறாமையின் சொற்பிரயோக விவேகம் என்றாம்’ எனவரும் உரை விளக்கத்தால் நூலாசிரியரே உரையாசிரியரும் ஆவர் என்பது விளங்கும்.

இந்நூலாசிரியரைப் பற்றி இலக்கணக் கொத்து, “ஆழ்வார் திருநகரப்பதி வாழும் சுப்பிரமணிய, வேதியன் தமிழ்ப்பிரயோக விவேகம், உரைத்துரை எழுதினன்” எனக் கூறுதலால் இவரைப் பற்றிய செய்திகளும் இவரே உரை செய்தார் என்பதும் உறுதியாம்.

வடமொழியும் தமிழும் தனித்தனி மொழிகள் அல்ல; ஒருமொழி என்னும் மயக்கவுணர்வுடன், வடமொழியே தமிழ்மொழி மூலம் என்னும் மாறுபட்ட உணர்வும் கொண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றிய நூல்களுள் இப்பிரயோக விவேகம் ஒன்று. இதன் முற்புகவு வீரசோழியம். தொடர்வரவு இலக்கணக் கொத்தும் பிறவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/406&oldid=1474414" இலிருந்து மீள்விக்கப்பட்டது