பக்கம்:இலக்கண வரலாறு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370


பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் என்னும் ஐந்தியல்களையுடையது. இவ்வதிகாரத்தின் மொத்த நூற்பாக்கள் 569, ஆக மொத்த நூற்பாக்கள் 941.

பாடம்

“முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும்
பொன்னே போல் போற்றுவம்”

என்பதொரு நெறி பண்டு தொட்டே உண்டாயிற்று. அதன் விளைவு இத்துணையாம் என்று அந்நெறியை உண்டாக்கியவரோ, நேர்ந்தவரோ எண்ணியும் இரார். எடுத்துக் கொள்ளப்பட்ட நூற்பாக்கள் மிகையாகவும், புதிதாகப் படைத்துக் கொண்டவை குறைந்தவையாகவும் அமைந்து விட்ட நூல் இலக்கண விளக்கம். பாடங்களைத் திருத்தியும் புகுத்தியும் திரித்தும் பிறர் நூற்பாக்களைப் பயன் கொள்வது நூன் முறை யன்றாம்.

நடைநிலை

தொல்காப்பியனார் நடை, இறையனார் களவியலார் நடை, நன்னூலார் நடை, யாப்பருங்கலத்தார் நடை, புறப்பொருள் வெண்பாமாலையார் நடை, நம்பியகப் பொருளார் நடை, தண்டியலங்காரத்தார் நடை இவற்றுள் அமைந்த ஒரே ஓர் ஒருமைப்பாடு நூற்பா — அகவல் நூற்பா — நடை என்பதே. ஆனால் ஒவ்வொருவர் செறிவும், நெகிழ்வும், ஆட்சியும் அமைப்பும் நேர்ச்சியும் நிலையும் வேறுபட்டவை என்பதை எவரும் வெளிப்பட அறிவர். ஆகவும், பகுதிதோறும் ஒவ்வொரு நூலை அள்ளிக் கொண்டு வைத்தலால் அந்நடை வேற்றுமைகள் நூனடைக்குரிய ஒருமையை ஒழிப்பன என்பதைத் தெளியலாம். பெரிதும் பன்னிலை நடையவாம் தொகுப்பாக நூல் கருதப்படுமே அன்றி ஆக்க நூலாகக் கொள்ளப்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/415&oldid=1474421" இலிருந்து மீள்விக்கப்பட்டது