பக்கம்:இலக்கண வரலாறு.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

379

இயற்றிய வைத்தியநாத தேசிகர் திருவாவடுதுறைக்கு வந்து திருமடத் தலைவரோடு பந்தியில் இருந்தார். மற்றையோரும் முதுமை இளமை முறைமைப்படி பந்தியில் இருந்தனர் அந்நிலையில் கடைசியில் இருந்தவர் சுவாமிநாத தேசிகர்.

வழிவந்த களைப்பால் வைத்தியநாத தேசிகர் நன்கு உண்ணாதிருத்தலைக் கண்ட திருமடத் தலைவர் ‘வந்த விளைப்பால் ஊண் செவ்வையாகச் செய்தற்கு இசைய வில்லையோ?’ என வினவ, தேசிகர் ‘வந்த விளைப்பு’ என்னும் தொடர்மொழிக்கு இலக்கணம் கேட்கத் தொடங்கினார். திருமடத் தலைவர் பந்தியின் கடைசியில் இருந்த சுவாமிநாத தேசிகரை நோக்கத் தேசிகரை நோக்கி இலக்கணங்கள் யாவும் விளக்கினார். சிலபல வினாக்களும் தொடுத்தார். அதைக்கேட்ட தேசிகர் “தொல்காப்பிய முதலிய நூல்களை எழுத்தெண்ணிப் படித்த சுவாமிநாத மூர்த்தியா! தேவர் இவ்விடத்தில் வந்திருப்பது எனக்குத் தெரியாது” என்றார் என்பது அச்செய்தி.

இத்தேசிகர் நுண்மாண் நுழை புலத்தர்; பாடங் கேட்டல், போற்றல், தொகுத்து வைத்தல், வருவித்தல், பொருத்திக் காட்டல், நிறுவுதல் ஆகிய இலக்கணக் கூறுகள் அனைத்தும் இனிதுற வாய்க்கப் பெற்றவர். நன்றி மீக்கூர்ந்தவர்; பணிவின் தலைவர் இத்தகைய ஆற்றல் தமிழ் நலத்திற்கும் ஆகாமல், தமக்கும் நிலைபேறாம் புலமைச் சிறப்பைத் தாராமல் போயிற்றே என்பதை இலக்கணக் கொத்தினை நேரிய உணர்வுடன் கற்பார் எவரும் கருதுவர்!

பாயிரம்

இலக்கணக் கொத்தின் சிறப்புப் பாயிரம் ஒரு நெடிய நேரிசை ஆசிரியப்பா. 31 அடிகளையுடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/424&oldid=1474475" இலிருந்து மீள்விக்கப்பட்டது